வெப்ப அலையை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் இந்தியர்கள்.! 

chv

வெப்ப அலை கடந்த ஆண்டுகளைவிட, இந்த ஆண்டு வெப்ப அலையின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மே மாதம் தொடங்கும் கோடை வெயில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே தொடங்கியிருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருக்கிறது. 

மேற்கு வங்காளம், பீகார், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்ப நிலை ஆபத்தான அளவில் இருக்கும் என்று ஆரஞ்சு அலார்ட் கொடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதேபோல், சிக்கிம், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்றும் எச்சரித்துள்ளது. இந்தநிலையில், தீவிர வெப்பநிலையை இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது என்று ஆராய்சியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

வெப்பம் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வெப்பம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2050-ம் ஆண்டில் இரண்டு முதல் நான்கு மடங்கு வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பஅலை அடிக்கடி முன்கூட்டியே நிகழும் என்றும் கணிக்கப்படுகிறது. 

வெப்ப அலை மே மாதம் இறுதி வரை சராசரிக்கும் அதிகமாக வெப்ப அலைகள்  இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 1901 முதல் 2018 ஆண்டுகளுக்கு இடையில், சராசரி வெப்பநிலை இந்தியாவில் 0.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இது காலநிலை மாற்றம் காரணமாக நிகழ்ந்தது. 

1992 முதல் 2015 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சுமார் 22 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வெப்ப அலையின் விளைவுகள் பற்றியும், வெப்பம் எந்த அளவிற்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதையும் இதுவரைக்கும் இந்தியா புரிந்துகொள்ளவில்லை என்று குஜராத்தை தளமாகக் கொண்ட இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் திலீப் மாவலங்கர் தெரிவித்துள்ளார். 

2010-ம் ஆண்டு மே மாதம் அகமதாபாத் நகரில் 800-க்கும் அதிகப்படியான இறப்புகள் பதிவு செய்திருப்பதை திலீப் மாவலங்கர் கண்டறிந்தார். நகரத்தில் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை அன்றைய நாளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையுடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு, சிவப்பு எச்சரிக்கை 45C-க்கு மேல் மூன்று வண்ண குறியீட்டு எச்சரிக்கைகளை வகுத்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்புகளால் தூண்டப்பட்டு, இந்தியாவில் முதன்முறையாக அகமதாபாத்தில் வெப்ப செயல் திட்டம் பேராசிரியர் மாலவங்கரின் உதவியால் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் 2013-ல் தொடங்கப்பட்டது. வீட்டிற்குள்ளேயே இருப்பது, வெளியே செல்வதற்கு முன் நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவசர மருத்துவமனைக்குச் செல்வது போன்ற எளிய தீர்வுகளை இந்த திட்டம் பரிந்துரைத்தது. 2018-ம் ஆண்டளவில் வெப்பமான, வறண்ட நகரத்தில் அனைத்து காரணங்களாலும் ஏற்படும் இறப்புகள் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

வெப்ப அலையில் இருந்து தற்காத்து கொள்வதற்கான தீர்வாக, போதுமான அளவிற்கு மரங்களை வெப்பம் நிறைந்த பகுதிகளில் நட வேண்டும் அல்லது வெப்பம் அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் படியான கட்டிடங்களை வடிவமைக்கலாம். உச்சகட்ட வெப்பத்தால் 55 சதவீத உயிரிழப்புகள் கடந்த 2000-2004 மற்றும் 2017-2021 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சந்தித்திருப்பதாக, லான்செட் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, நவிமும்பையில் அரசு நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இருந்தபோதிலும், அந்த நிகழ்ச்சியில் எந்தவித மேற்கூரை இல்லாமல் அமர்ந்திருந்தனர். அதில் சில பேர் மட்டுமே குடைகளையும் தலையில் துண்டுகளையும் சுற்றியிருந்தனர். இந்தியர்கள் வெப்பத்தை இதுவரைக்கும் தீவிரமானதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று மாலவங்கர் தெரிவிக்கிறார்.