கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழர்கள் ஒன்றிணையும் தமிழர் சங்கமம்…!

Tamilar sangamam

உலகத்தமிழர்கள் ஒன்றிணையும் தமிழர் சங்கமம் நிகழ்வு சென்னையில் கோலாகலமாக இன்று (ஜன 06) தொடங்கியது. 

உலக தமிழர் மாநாடுகள்

தி ரைஸ் (The Rise) எழுமின் அமைப்பு, ஆண்டிற்கு இரண்டு முறை உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும், தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களை ஒன்றிணைத்து சர்வதேச மாநாடுகளை நடத்திவருகிறது. 

கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 6, 7 மற்றும் 8 ஆகிய லண்டன் மாநகரில் தி ரைஸ் அமைப்பின் 8வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தமிழர்களும், இலங்கை தமிழ் தொழிலதிபர்களும் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் புதிய தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், பெண் தொழில்முனைவோர்கள் என பலரும் பங்குபெற்று பயனடைந்தனர். 

இலண்டன் மாநாட்டைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் ஐக்கிய அரபு நாடுகளின் மையமாக விளங்கும் துபாய் மாநகரில் ரைஸ் அமைப்பின் 9வது மாநாடு நடைபெற்றது. ஐக்கிய அரபு நாடுகளில் தொழில் மற்றும் வணிகம் செய்யும் தமிழர்களையும், அங்கு வேலை பார்க்கும் லட்சக்கணக்கான தமிழ் தொழிலாளர்களின் நலனையும் முதன்மையாக கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்களும், தமிழ் தொழிலதிபர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இந்த மாநாட்டில் பல தொழிலதிபர்கள் தங்களுடைய தொழில்யுக்தியையும், தங்களது தயாரிப்புகளையும் முன்வைத்து முதலீட்டாளர்களையும், வெளிநாடுகளில் தங்களது தொழில்களை தொடங்குவதற்காக தொழிலதிபர்களின் கவனத்தையும் ஈர்த்தனர். 

சென்னை மாநாடு 

இந்நிலையில், தங்கள் 10வது மாநாடு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்று துபாயில் வைத்து, இதன் நிறுவனர் தமிழ்ப்பணி. ஜெகத் கஸ்பார் அறிவித்திருந்தார். திட்டமிட்டபடி 10வது உலகத் தமிழர்கள் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்த தேவையான பணிகள் அனைத்தும் முழுமூச்சில் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னையே திரும்பி பார்க்கும் அளவிற்கு இன்று கோலாகலமாக தொடங்கியது சென்னை மாநாடு.  

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்குவோர் மற்றும் உருவாக்குவோர் இந்த மாநாட்டில் அதிகளவில் பங்கேற்றுள்ளனர்.