குவைத்தில் கோலோச்சும் தமிழ் பொறியாளர் கிருஷ்ணா ஜெகனுடன் ஓர் நேர்காணல்..! 

Krishna Jegan

தி ரைஸ் (எழுமின்) அமைப்பு நடத்தும் 10வது உலகத் தமிழர் தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருக்கும் பொறியாளரும், தொழிலதிபருமான கிருஷ்ணா ஜெகன் அவர்களை தொடர்புகொண்டு, எழுமின் அமைப்பு குறித்தும், சென்னையில் நடைபெறும் மாநாடு குறித்தும், அனைத்துலகத் தமிழ் பொறியாளர்களுக்கான மாமன்றம் குறித்தும், அதன் செயல்பாடுகள், நோக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பல கேள்விகளை எழுப்பினோம், அதற்கு அவர் அளித்த பதில்களை காணலாம்

கேள்வி: உங்களை பற்றிய சிறிய அறிமுகம்?

பதில்: எனது பெயர் கிருஷ்ணா ஜெகன், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் என்ற ஒரு சிறிய கிராமத்தில்தான். கடந்த 23 ஆண்டுகளாக குவைத்தில் பொறியாளராக பணியாற்றிவருகின்றேன். நான் பணியாற்றும் நிறுவனத்தில் எனக்கு கீழ் 2000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். எனது மனைவி கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்திலும் 250 பேர் பணியாற்றிவருகின்றனர். 

கேள்வி: தி ரைஸ் (எழுமின்) அமைப்போடு நீங்கள் இணைந்தது எப்படி? 

பதில்: கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்பணி.ஜெகத் கஸ்பர் அவர்கள் குவைத்தில் எழுமின் அமைப்பின் கிளையை தொடங்கியபோது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழுக்காகவும், உலகத் தமிழர்களுக்காகவும், ஜெகத் கஸ்பர் அவர்கள் ஆற்றும் பணியும், எழுமின் அமைப்பின் தொலைநோக்கு பார்வையும் என்னை ஈர்த்ததால், நானும் குவைத் எழுமின் அமைப்பின் ஒரு அங்கமாக மாறிவிட்டேன். தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று ஊரடங்கிற்கு பிறகு 2022ம் ஆண்டு மே மாதம் லண்டன் மாநகரில் நடைபெற்ற எழுமின் அமைப்பின் எட்டாவது மாநாட்டிலும், 2022ம் ஆண்டு நவம்பரில் துபாய் மாநகரில் நடைபெற்ற ஒன்பதாவது மாநாட்டிலும் கலந்துகொண்டேன். இப்போது சென்னையில் நடைபெற உள்ள 10வது மாநாட்டிலும் கலந்துகொள்ள இருக்கிறேன். தி ரைஸ் எழுமின் அமைப்புடனான எனது பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

கேள்வி: தி ரைஸ் எழுமின் அமைப்பின் 10வது மாநாடு சென்னையில் 2023 ஜனவரி 6, 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை பற்றி கொஞ்சம் கூறுங்கள்? 

பதில்: தி ரைஸ் எழுமின் அமைப்பு உலக அளவில் உள்ள தமிழர்கள், தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள், வணிகர்கள், முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், பெண் தொழில்முனைவோர், பொறியாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என பலத்துறையை சேர்ந்தவர்களையும் தமிழர் என்ற உணர்வோடு ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக இந்த மாநாடு நடைபெற உள்ளது.

கேள்வி: சென்னையில் நடைபெறும் இந்த 10வது மாநாட்டில் அனைத்துலக பொறியாளர்கள் மாமன்றம் என்ற அமைப்பும், பொறியாளர்களுக்கான சிறப்பு மாநாடும் நடைபெறவுள்ளது. இதைக்குறித்து சுருக்கமாக கூறமுடியுமா? 

பதில்: கடந்த 22 ஆண்டுகளாக குவைத் நாட்டில் தமிழ் பொறியாளர்கள் அமைப்பு செயல்பட்டுவருகிறது. கடந்த 2019 மற்றும் 2022ம் ஆண்டுகளில் இந்த அமைப்பின் தலைவராக நான் பொறுப்பு வகித்தேன். 2019ம் ஆண்டு, தமிழ்பணி.ஜெகத் கஸ்பர் அவர்களை குவைத்தில் சந்தித்தபோது, குவைத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் தமிழ் பொறியாளர்கள் 500 பேர் இணைந்து நடந்தும் குவைத் தமிழ் பொறியாளர்கள் (KTE) அமைப்பைக் குறித்து விளக்கினேன். இந்தியாவிற்கு வெளியே தமிழ் பொறியாளர்கள் இணைந்து நடத்தும் இந்த அமைப்பைக் குறித்து அறிந்த உடன் எங்களை வெகுவாக பாராட்டிய அவர், இதை ஏன் நீங்கள் உலகளவில் செயல்படுத்தக்கூடாது எனக் கேள்வி எழுப்பி, அவர் அளித்த ஆலோசனை மற்றும் ஊக்கத்தினாலேயே துபாய் மாநாட்டின்போது, அனைத்துலகத் தமிழ் பொறியாளர்கள் மாமன்றமானது அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது சென்னையில் நடைபெறும் மாநாட்டில் உலகளவில் விமரிசையாக அனைத்துலகத் தமிழ் பொறியாளர்கள் மாமன்றம் தொடங்கப்படவுள்ளது.

கேள்வி: அனைத்துலகத் தமிழ் பொறியாளர்கள் மாமன்றத்தின் நோக்கம் என்ன? 

பதில்: உலகளவில் 50 நாடுகளில் இருந்து, குறைந்தது மூன்று இலட்சம் தமிழ் பொறியாளர்களை உறுப்பினர்களாக இணைக்க முயற்சி செய்துவருகிறோம். மேலும் உலக அளவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டில் படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சியை எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மூலம் வழங்கி, வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.

கேள்வி: அனைத்துலகத் தமிழ் பொறியாளர்கள் மாமன்றத்தின் தொடக்க விழாவில் எந்தெந்த நாடுகளில் இருந்து தமிழ் பொறியாளர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்?

பதில்: உலக அளவில் பல நாடுகளில் உள்ள தமிழ் பொறியாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று தொடக்க விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், சவுதி அரேபியா, இலங்கை, குவைத், ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கலந்துகொள்கிறார்கள். 

கேள்வி: அனைத்துலகத் தமிழ் பொறியாளர்கள் மாமன்றத்தில் யாரெல்லாம் இணையலாம்? 

பதில்: இந்த மாமன்றத்தில் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் எந்த நாடுகளில் வசித்தாலும் அவர்கள் இணையலாம். இதில் உறுப்பினர்களாக இணைய விரும்புகிறவர்கள் பொறியியலில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். டிப்ளமோ படித்தவர்கள், தங்களது கல்விக்கு ஏற்ற பணியில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி செய்து அனுபவம் இருக்க வேண்டும். 

கேள்வி: அனைத்துலக தமிழ் பொறியாளர்கள் மாமன்றத்தின் எதிர்காலத் திட்டம் என்ன? 

பதில்: அடுத்த ஓராண்டிற்குள் பல தொழில்நுட்ப கருத்தருங்குகளை நடத்தவும்,  பொறியாளர்களுக்கான சர்வதேச வேலை வாய்ப்பு முகாம் நடத்தவும், இளம் பொறியாளர்களுக்கு பயிற்சி வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். பொறியாளர்கள் வேலை செய்பவர்களாக மட்டும் இல்லாமல் பலக்கும் வேலை வழங்கும் தொழில்முனைவோர்களாகவும், தொழிலதிபர்களாகவும் உருவாக்க திட்டம் வகுத்துள்ளோம். 

உங்களுடைய நெருக்கடியான பணிச்சூழலுக்கு மத்தியில் www.thisistamil.com டிஜிட்டல் செய்தி ஊடகத்திற்காக பேட்டி அளித்ததற்கு நன்றி.