சென்னையில் களைக்கட்ட உள்ள ‘தமிழர் சங்கமம்’…. ஜெகத் கஸ்பர் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

tamilar sangamam

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் தி ரைஸ் எழுமின் அமைப்பின் சார்பாக உலகத்தமிழர்கள் ஒன்றிணையும் ‘தமிழர் சங்கமம்’ கோலாகலமாக  நடைபெற உள்ளது. 

தி ரைஸ் எழுமின் அமைப்பு

ஜெகத் கஸ்பர் ராஜால் நிறுவப்பட்ட ‘தி ரைஸ்- எழுமின்’ அமைப்பு, உலகளவில் சமூக தொழில்முனைவை ஊக்குவிக்கும் மாபெரும் அமைப்பாக உருவெடுத்து, நான்கு ஆண்டுகளில் 25 உலக நாடுகளை சென்றடைந்துள்ளது. தி ரைஸ் அமைப்பின் மூலம் உலகத்தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்களை உலகளவில் ஒருங்கிணைக்கும் விதமாக 9 உலக வணிக மாநாடுகளையும் நடத்தியுள்ளார் ஜெகத்.

10வது உலகத் தமிழ் மாநாடு

இந்நிலையில், சென்னையில் வருகின்ற ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தி ரைஸ் அமைப்பின் சார்பில் 21 நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்கள் பங்கேற்கும் 10 ஆவது உலக தமிழர் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு ’தமிழர் சங்கமம்’ நடைபெற இருக்கிறது. 

ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்கள் பங்கேற்கும் 10 ஆவது உலக தமிழர் தொழில் அதிபர்கள் மாநாடு சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் உலக அளவில் பல்வேறு தொழில்களில் வெற்றி பெற்ற தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் பங்கேற்கிறார்கள். 

தமிழர் சங்கமம்

மாநாடு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தி ரைஸ் எழுமின் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர் கூறுகையில், “சென்னையில் வருகின்ற ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தி ரைஸ் அமைப்பின் சார்பில் 21 நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்கள் பங்கேற்கும் 10 ஆவது உலக தமிழர் தொழிலதிபர்கள் மாநாடு ’தமிழர் சங்கமம்’ நடைபெற இருக்கிறது.

கூட்டு மூலதனம் என்ற கருத்தியலை வலுப்படுத்தி தொழில் முனைவோருக்கு அதன் மூலமாக திறனை மேம்படுத்துவதற்காக வாய்ப்புகளை கலந்துரையாடி மேம்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கமாக இருக்கும்.

அனைத்துலக தமிழ் பெண்கள் தொழில் முனைவோர் அமைப்பினை மாநாட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். 

அதனை தொடர்ந்து ஜனவரி 8 ,9 ,10 ஆகிய 3 நாட்கள் நந்தனம் YMCA மைதானத்தில் தமிழர் பாரம்பரியம் சார்ந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதில் 8ஆம் தேதி 500 பொங்கல் பானைகள் கொண்டு அனைத்துலக தமிழர் ஒற்றுமை பொங்கல் விழா நடைபெற இருக்கிறது. ஜல்லிக்கட்டு காளைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இயற்கை வேளாண் சார்ந்த பொருட்களை  வாங்க ஊக்குவிக்க வேண்டும் என்ற வகையில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு பொங்கல் வைக்கப்பட உள்ளது.

தைப் பொங்கலை வரும் ஆண்டுகளில் தமிழரின் பெருமையை போற்றும் வகையில் உலக அளவில் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க உள்ளோம். சிலம்பம், களரி, அடிமுறைகளை மீட்டெடுத்தலை மையமாகக் கொண்டு அது சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
முக்கிய அரசியல் தலைவர்கள், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

எங்கள் 11வது மாநாடு மலேசியாவிலும், ஜி7 தலைவர்கள் மாநாடு நடத்தும் அரங்கில் 12 வது ரைஸ் எழுமின் மாநாடு ஸ்விட்சர்லாந்தில் அந்நாட்டு அதிபர் தொடங்கி வைக்க நடைபெற உள்ளது.”

இவ்வாறு ஜெகத் கஸ்பர் ராஜ் கூறினார்.