”தி ரைஸ் -எழுமின்” நிறுவனர் ஜெகத் கஸ்பருக்கு கௌரவ டாக்டர் பட்டம்… உலகத்தமிழர்கள் வரவேற்பு..!

fr jegath gasper

சமூக மேம்பாடு மற்றும் சமூக தொழில்முனைவு ஆகியவற்றில் தன்னிகரில்லா பணியை தொடர்ந்து செய்தமைக்காக தி ரைஸ் எழுமின் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி Asia Metropolitan பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது. 

அருட்தந்தை ஜெகத் கஸ்பர்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் பிறந்த அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ், கடந்த 31 ஆண்டுகளாக கத்தோலிக்க பாதிரியாராக பல்வேறு திருச்சபைகள் மற்றும் நிறுவனங்களை வழிநடத்தியுள்ளார். ஜனநாயகம், சமத்துவம், பாலின நீதி மற்றும் சுற்றுச்சூழல் அமைதி ஆகியவற்றில் உறுதியான நம்பிக்கை கொண்ட இவர், வரலாறு, தத்துவம், இறையியலில் இளங்கலைப் பட்டமும், அரசியல் அறிவியல், பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில்  முதுகலைப் பட்டமும் பெற்றவர். 

பயமற்ற குரலே நியாயம் மற்றும் நீதிக்கான முக்கிய கருவி என்று கருதும் இவர், அனைத்து வகையான அடிப்படைவாத கருத்துக்களையும், மதவாத அரசியலையும் கடுமையாக எதிர்ப்பவர். தமிழின் மீது தீராத பற்றுக்கொண்டவரான இவர், தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் பல நிகழ்வுகளை ஒருங்கிணைத்து, உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் மாபெரும் முயற்சியின் ஆணிவேராக திகழ்ந்துக் கொண்டிருக்கிறார். 

தி ரைஸ் எழுமின் அமைப்பு

உலகளவில் சமூக தொழில்முனைவை ஊக்குவிக்கும் தி ரைஸ் எழுமின் அமைப்பை நிறுவிய ஜெகத்தின் இந்த முயற்சி மூன்றே ஆண்டுகளில் 25 உலக நாடுகளை சென்றடைந்துள்ளது.  

தி ரைஸ் அமைப்பின் மூலம் உலகத்தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்களை உலகளவில் ஒருங்கிணைக்கும் விதமாக 9 உலக வணிக மாநாடுகளையும் நடத்தியுள்ளார். அதோடு உலகெங்கிலும் உள்ள தொழில்முனைவோருக்கு தொழில்முனைவு மற்றும் மேலாண்மை பற்றிய விரிவுரைகளையும் வழங்கியுள்ளார். 

கஸ்பர் ராஜ், ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கு ஸ்ரீராம் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அகிலா சீனிவாசனுடன் இணைந்து GiveLife திட்டத்தை உருவாக்கினார். தற்போது இந்த திட்டம் 47,000 குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க GiveLife சென்னை இன்டர்நேஷனல் மராத்தானை செயல்படுத்திய பெருமையும் இவரையே சேரும். 

உலகளவில் குறிப்பாக ஆசியாவில் பல இயக்கங்களுக்கு முன்னோடியாக ஜெகத் இருக்கிறார். அதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதாரப் பின்னணியை மேம்படுத்துவது, சுகாதாரம் மற்றும் கல்வி  உயர்வை அடைய வைப்பது என மகத்தான முயற்சிகளை இவர் மேற்கொண்டு வருகிறார். 

இவர், தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் – CTACIS ஐ நிறுவினார். இது சிறு நடுத்தர தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் அமைப்பாக பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. 

இலங்கைத் தமிழ்க் குடும்பங்களை ஒன்றிணைத்த ஜெகத்

இவர் சர்வதேச ஒலிபரப்பு பத்திரிகையாளராக ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். வெரித்தாஸ் வானொலியில் “உறவுப்பாலம்” எனும் தனது நிகழ்ச்சியின் மூலம், 1995-2001க்கு இடையில் உள்நாட்டுப் போரினால் சிதைந்த சுமார் 4600 இலங்கைத் தமிழ்க் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைத்தார். சர்வதேச அளவில் சிறந்த ஒலிபரப்பாளர், மனித உரிமை ஆர்வலராக அறியப்படும் இவர் பல்வேறு விருதுகளை வென்றார்.

தன்னிகரில்லா தமிழ்ப்பணி

தமிழில் பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர், தமிழில் கலை, கலாச்சாரம் மற்றும் அறிவார்ந்த ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக 2002 இல் ’தமிழ் மையம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். தமிழில் கலை, கலாச்சாரம் மற்றும் அறிவார்ந்த ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான தமிழ் மையத்தின் முதல் நிகழ்வு என்பது மேஸ்ட்ரோ இளையராஜாவின் சிம்போனியில் உருவான ’திருவாசகம்’. ஹங்கேரி, அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து 250க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சியில் பங்கேற்று இருந்தனர். இம்மாபெரும் முயற்சியில் நிதி திரட்டல் முதல் மிகவும் சவாலான பணிகள் என அனைத்தையும் ஜெகத் கஸ்பரே ஒருங்கிணைத்தார்.

நலிந்த கலைஞர்களின் மேம்பாட்டுக்காகவும், மண்சார்ந்த கலைகளை மீட்டெடுக்கவும் சென்னை சங்கமம் எனும் மாபெரும் திறந்தவெளி நிகழ்வை தமிழக அரசுடன் ஒன்றிணைந்து நடத்தினார்.  மேலும், மேடைத் தமிழுக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக பல்துறை சார்ந்த அறிஞர்களை கொண்டு “சங்கம் 4” என்ற நிகழ்வினை உருவாக்கினார் ஜெகத். 

டாக்டர் பட்டம்

இந்நிலையில், தமிழுக்காவும் தமிழர்களுக்காகவும் உலக அரங்கில் குரல் கொடுத்துவரும் இவருக்கு Asia Metropolitan பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்து உள்ளது.  மலேசியாவின் ஜோகூரில் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற Asia Metropolitan பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

உலகத்தமிழர்கள் வரவேற்பு

சமூகப்பணிக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய Asia Metropolitan பல்கலைக்கழகத்திற்கு உலகத்தமிழர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இறுதிமூச்சு தமிழுக்கே

இதற்கு நன்றி தெரிவித்த தமிழ்ப்பணி ஜெகத் கஸ்பர், தன் இறுதிமூச்சி வரை சமூக மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுப்படுவதாக தெரிவித்துள்ளார்.