அனைத்துலக தமிழ் பொறியாளர்கள் மாமன்றத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்..!

Sivasankar

சர்வதேச அளவில் தமிழ் தொழில் முனைவோர்கள், திறனாளர்களை ஒருங்கிணைக்கும் The Rise எழுமின் அமைப்பின் 3நாள் உலக மாநாடு சென்னையில் நடைப்பெற்றுவருகிறது. தி ரைஸ் எழுமின் அமைப்பு நடத்தும் 10வது உலக மாநாடு இது. இம்மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் தொழில் முனைவோர்கள் பங்கேற்று வருகின்றனர். நேற்று (06-01-2023) சென்னை, கிண்டியில் உள்ள ஹில்டன் நட்சத்திர விடுதியில் தொடங்கிய இம்மாநாட்டின் முதல் நாளில் சுமார் 25 நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட தமிழ் தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தமிழர் சங்கமத்தின் 2 ஆம் நாளான இன்று (07-01-23) தமிழர்களை ஒருங்கிணைக்கும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தப்பட்டது. குறிப்பாக அனைத்துலகத் தமிழ் பொறியாளர்கள் மாநாட்டை The Rise எழுமின் அமைப்பு நடத்தியது.

பொறியாளர்கள் மாநாடு

இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளில் பணி புரியம் தமிழ் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மிக்க தமிழ் பொறியாளர்கள் மாநாட்டை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் சிறப்பு விருந்தினர்களாக திரு.சக்திவேல் இ.ஆ.ப., அவர்களும், திருமதி இன்னோசெண்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மருத்துவர்கள் மாநாடு 

நண்பகல் உணவு இடைவேளைக்கு பிறகு தமிழ் மருத்துவர்கள் பங்குபெறும் மாநாட்டில் உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழ் மருத்துவ ஆளுமைகளும் பங்கேற்று தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில் மருத்துவ உலகில் கோலோச்சும் தமிழ் மருத்துவர்களை ”The Rise எழுமின் அமைப்பு” அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில், உலகத் தமிழ் மருத்துவர்கள் (TDI) அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் வெற்றிவேல் அவர்கள், அனைத்துலக தமிழ் மருத்துவர்கள் மாமன்றத்தின் நோக்கம், இலக்கு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களும் பங்கேற்று உரையாற்றினர். 

இரண்டு நாட்கள் நிகழ்வு சிறப்பாக முடிவுற்ற நிலையில், இறுதி நாளான நாளை, தமிழர் நடை, சமத்துவப் பொங்கல் விழா சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது.