தமிழர்களின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞர் கனிமொழியுடன் ஓர் உரையாடல்

Kanimozhi

தி ரைஸ் எழுமின் அமைப்பு, தமிழர் சங்கமம் என்ற தலைப்பில் நடத்தும் உலகத்தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஹில்ட்டன் நட்சத்திர விடுதியில் நடைபெற்றுவருகிறது.இந்நிலையில் தமிழுக்காகவும், சமூகநீதிக்காகவும், பெண்களின் விடுதலைக்காகவும் பணியாற்றும் வழக்கறிஞர் திருமதி.கனிமொழி மதி அவர்களிடம் பேட்டி எடுக்க அலைபேசியில் தொடர்புகொண்டோம், தனது நீதிமன்ற பணிகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கு எங்களின் கேள்விகளுக்கு பொறுமையாக அவர் அளித்த பதில்களை காணலாம். 

கேள்வி: உங்களைப் பற்றிய சிறிய அறிமுகம்? 

பதில்: 22 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றுகிறேன். கீழடி தொல்பொருள் ஆராய்ச்சி தடை ஏற்பட்டபோது, அந்த நிகழ்வை மக்கள் கவனத்திற்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து மீண்டும் அகழ்வாராய்ச்சி நடந்து தமிழர்களின் வரலாறு, நாகரீகம், பாரம்பரியம் இந்த உலகுக்கு தெரிய பங்காற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன். இதைத்தாண்டி, சமூகநீதி, மற்றும் பெரியாரிய கொள்கைகளை பின்பற்றி பெண்களின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றிவருகிறேன்.

கேள்வி: The Rise எழுமின் அமைப்பிற்கும் உங்களுக்குமான தொடர்பு என்ன? எத்தனை ஆண்டுகள் தி ரைஸ் அமைப்போடு பயணிக்கிறீர்கள்? 

பதில்: தி ரைஸ் அமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே, தமிழ் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் நலனுக்காக தொடங்கப்பட்ட, தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றத்தின் (CTACIS) நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்துவருகிறேன். இந்த அமைப்பே தி ரைஸ் அமைப்பிற்கு முன்னோடி அமைப்பாகும்.தமிழ் மொழி, தமிழ் நிலம், இயற்கையால் உருவாக்கப்பட்ட அறிவியல், தமிழர்களின் வரலாற்றை உலகுக்கு பறைசாற்ற வேண்டும் என்ற கொள்கைகளால் இந்த அமைப்பில் தொடர்ந்து பயணித்து வருகிறேன். 

கேள்வி: இதுவரை நடந்த தி ரைஸ் மாநாட்டிற்கும் இப்பொழுது நடக்கவிருக்கும் மாநாட்டிற்கும் என்ன வித்தியாசம்? 

பதில்: தி ரைஸ் அமைப்பின் முதல் மாநாடு  2018ம் ஆண்டு, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் வைத்து நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சென்னை, மலேசியா கொரோனா காலத்தில் இணைய வழி மாநாடுகள் என ஏழு மாநாடுகள் நடைபெற்றன. கொரோனா காலகட்டம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய மாநாடாக, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்கள் கலந்துகொண்ட மாநாடாக 2022ம் ஆண்டு மே மாதம் லண்டனில் நடைபெற்ற மாநாடு இருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் துபாய் மாநகரில் 9வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வைத்து 10வது மாநாடு சென்னையில் நடைபெறும் என தமிழ்பணி.ஜெகத் கஸ்பர் அறிவித்தார். இந்நிலையில் உலகத் தமிழ் தொழிலதிபர்களின் ஆதரவோடு 10வது மாநாடு வெற்றிகரமாக சென்னையில் நடைபெற்றுவருகிறது. மதுரை மாநாட்டில் கலந்துகொண்டவர்களை விட இந்த மாநாட்டில், பல நாடுகளில் இருந்தும் வந்து தொழிலதிபர்கள் கலந்துகொள்கிறார்கள். இதுவரை நடந்த அனைத்து மாநாடுகளின் மூலமும், ஒருவருக்கொருவர் நன்நம்பிக்கையும், நட்பும் வளர்ந்துள்ளது, இந்த நட்பு தொடர்ந்து வருகிறது. 


கேள்வி: இந்த 10வது மாநாட்டில் புதிதாக அனைத்துலக தமிழ் வழக்கறிஞர் மாமன்றம் தொடங்கப்படவுள்ளது. ஒரு வழக்கறிஞரா இதை எப்படி பார்க்றீர்கள்? 

பதில்: லண்டனில் நடைபெற்ற 8வது மாநாட்டின்போது உலகளவில் தமிழர்களுக்காக, தமிழர்களின் உரிமையை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைக்கவும், தமிழ் வழக்கறிஞர்களுக்காக ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்ற கருத்து உருவாகி, அதைக் குறித்து கலந்துரையாடி, அதற்கான திட்டங்களும் வகுத்து இன்று அனைத்துலக தமிழ் வழக்கறிஞர்கள் மாமன்றமாக உருவெடுத்துள்ளது. உலகளவில் பழமையான 5 மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி இருந்தாலும், நம் மொழியின் மிக முக்கிய கூறுகள், பழமை, அந்த பழமையில் இருக்ககூடிய அறிவியல், தமிழர்கள் மூடநம்பிக்கை இல்லாமல் தன்னம்பிக்கை உடையவர்களாக வாழ்ந்தார்கள் என்ற உலகம் அறிய வேண்டுமானால் அதற்கு உலகளவில் உள்ள தமிழ் வழக்கறிஞர்கள் சமூகம் மிக முக்கியமானதாக உள்ளது.   

கேள்வி: எந்தெந்த நாடுகளில் இருந்து வழக்கறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்? 

பதில்: லண்டன், கனடா, மலேசியா, ஐரோப்பா, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் வழக்கறிஞர்கள் சென்னை மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். இன்னும் அடுத்தடுத்த மாநாடுகளில் மற்ற நாடுகளில் உள்ள தமிழ் வழக்கறிஞர்களும் கலந்துகொள்வார்கள், அதற்கான முழு முயற்சிகளும் இந்த அமைப்பின் மூலம் எடுக்கப்படும். 

கேள்வி: அனைத்துலக தமிழ் வழக்கறிஞர் மாமன்றத்தின் நோக்கம் என்ன? 

பதில்: தமிழர்களுக்கான உரிமைகளை, உலக அரங்கில் ஐ.நா.பொது சபையில் எடுத்துரைப்பது. தமிழர்களின் உரிமைகளும், வரலாறும் உலகரங்கில் தொடர்ந்து மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. குறிப்பாக இலங்கை போரின்போது, அப்பாவி ஈழத்தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை உதாரணமாக கூறலாம். தமிழர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, உலகளவில் பல நாடுகளில் வேரூறின்றி வசிக்கிறார்கள். அப்படி வசிப்பவர்களின் மொழிக்கும், இனத்திற்கும் தனித்துவம் உள்ளது. இது இயற்கையால் வழங்கப்பட்ட ஒரு அறிவியல், இது மறுக்கப்படுகிறது, மறைக்கப்படுகிறது. இதை உலக அரங்கில் எடுத்துச் சொல்வதற்கு வழக்கறிஞர்கள் அவையோ, வழக்கறிஞர்கள் குழுமமோ இல்லை. அங்கொன்றொரும், இங்கொன்றுமாக இருக்கும் வழக்கறிஞர்கள் குழுமத்தை இணைத்து செயல்பட இந்த அமைப்பு தேவையானதாக உள்ளது. 

கேள்வி: இந்த வழக்கறிஞர் மாமன்றத்தில் யாரெல்லாம் இணையலாம்? 

பதில்: தமிழுக்காக, தமிழர்களின் உரிமையை நிலைநிறுத்தவும், தமிழர்களின் வளர்ச்சிக்காகவும் முழுமையாக வேலை செய்வோம், தமிழ் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாட்டுடன் உள்ள, தமிழர்களை பாதுகாக்கவும், வேற்றுமையுடனும் பகைமைத் தனத்துடனும் மற்றவர்களுடன் நடந்துகொள்ளாதவர்கள், அனைவருடனும் நட்பு பாராட்டக்கூடிய வழக்கறிஞர்கள் இந்த மாமன்றத்தில் இணையலாம். 

கேள்வி: அனைத்துலக தமிழ் வழக்கறிஞர் மாமன்றத்தின் எதிர்காலத் திட்டம் என்ன? 

பதில்: தமிழ்நாட்டை பொறுத்தவரை, இங்குள்ள தீர்ப்பாயங்களில் கிராமப்புறத்தில் படித்து வளர்ந்தவர்களோ, முழுமையாக தமிழ் பற்றுள்ளவர்களோ இந்த தீர்ப்பாயங்களில் வந்து பயிற்சி பெறவோ பணியாற்றவோ இல்லை. கிராமப் புறங்களில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு இதற்கான பயிற்சியை அளிப்பது. இந்த தீர்ப்பாயங்களில் கிராமப் புறங்களில் படித்தவர்களும், தமிழ் வழியில் பயின்றவர்களும் உள்ளே நுழைவதே ஒரு இமாலய சாதனையாக உள்ளது. எனவே இதை நிறைவேற்றுவதே முதல் நோக்கமாக உள்ளது. அதைப்போல உலக அரங்கில் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியையும், உண்மையையும் பெற்றுதருவதும் முக்கியமானதாக உள்ளது. நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் வழக்காடுதலும், நீதி வழங்குதலும் தமிழில் இருக்க வேண்டும், அதற்கான முயற்சிகளும் எடுக்கப்படும். 


தங்களின் உயரிய நோக்கமும், தொலை நோக்கு சிந்தனையும் வெற்றிபெற thisistamil.com சார்பாக வாழ்த்துகள்.