பி வெல் மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் வெற்றிவேலுடன் நேர்காணல்..! 

Dr.Vetrievel

விருதுநகர் மாவட்டம், பட்டாசு நகரமான சிவகாசியில் பிறந்து வளர்ந்து ஐரோப்பாவில் மருத்துவப் மேற்படிப்பையும் அதைத் தொடர்ந்து பயிற்சியையும் முடித்துவிட்டு, கடந்த 2001ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையிலான மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும், நடுத்தர மக்களின் வாழ்வில் சுகாதாரம் மேம்பட வேண்டும் என்ற உயரிய நோக்குடன் 2011ம் ஆண்டு பி வெல் (Be Well) மருத்துவமனையை தொடங்கி, இன்று தமிழ்நாடு முழுவதும் 12 மருத்துவமனைகளைத் உருவாக்கி, மருத்துவராகவும், தொழிலதிபராகவும் சிறந்து விளங்கும் மருத்துவர் C.J.வெற்றிவேல் அவர்களிடம் தொலைப்பேசியில் நேர்காணல் எடுக்க thisistamil.com சார்பாக தொடர்புகொண்டோம். சற்று உடல்நலம் குன்றியிருந்தாலும், தனது நேரத்தை ஒதுக்கி தொலைப்பேசியில் பேட்டியளித்தார். அவர் நமக்கு அளித்த பேட்டியை காணலாம்.

கேள்வி: யார் இந்த C.J. வெற்றிவேல்? 

பதில்: பி வெல் மருத்துவ குழுமத்தின் தலைவராக உள்ளேன். அமெரிக்காவில் எனது உயர் படிப்பையும், பயிற்சியையும் முடித்த பிறகு, 2001ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து பத்து ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றினேன். நடுத்தர மக்கள் தரமான மருத்துவத்தை குறைந்த செலவில் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டதே பி வெல் மருத்துவமனை. கடந்த 11 ஆண்டுகளில் 12 மருத்துவமனைகளை தமிழ்நாடு முழுவதும் தொடங்கி, இன்று மருத்துவராகவும், தொழிலதிபராகவும் பணியாற்றிவருகிறேன். 

கேள்வி: உங்கள் மருத்துவமனைக்கு பி வெல் என பெயரிடக் காரணம் என்ன? 

பதில்: 2011ல் மருத்துவமனையை தொடங்குவதற்கு முன்னர், பல பெயர்களை ஆலோசித்தோம், நண்பர்களும், குடும்பத்தினரும் கவர்ச்சிகரமான பெயர்களை பரிந்துரைத்தனர். யாருக்காவது நோய் வந்தால் கெட் வெல் (Get Well) எனக் கூறுவோம், அதுவே நோயே வரமால் இருக்க பி வெல் (Be well) எனக்கூறுவோம், இது மக்களிடம் உணர்வுப்பூர்வமாக எளிதில் சென்றடையும் என்பதால் இந்தப் பெயரை வைத்தோம். 

கேள்வி: தி ரைஸ் அமைப்பிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? 

பதில்: ரடோ லப்ஸ் (Rado Labs) நிறுவனர் மருத்துவர் பிருந்தா அவர்கள் மூலமாக தி ரைஸ் எழுமின் அமைப்பைக் குறித்து தெரிந்துகொண்டேன். பின்னர் தமிழ்பணி.ஜெகத் கஸ்பார் அவர்களை சந்தித்தபோது, எழுமின் அமைப்பின் நோக்கம், தமிழர்களுக்காக அவர் ஆற்றும் பணி ஆகியவை என்னை மிகவும் ஈர்த்தது. 2022ம் ஆண்டு மே மாதம் லண்டனில் நடைபெற்ற 8வது உலகத் தமிழர் தொழிலதிபர் மாநாட்டில் கலந்துகொண்டேன். மூன்று நாட்கள் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகள், கலந்துரையாடல், நெட்வொர்க்கிங், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த தொழிலதிபர்களை சந்திக்கும் வாய்ப்பும் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. அதைத் தொடர்ந்து  கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய் மாநகரில் நடைபெற்ற 9வது மாநாட்டிலும் கலந்துகொண்டேன். 

கேள்வி: சென்னையில் ஜனவரி 6, 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெறும் 10வது மாநாட்டில் அனைத்துலக தமிழ் மருத்துவர்கள் மாமன்றம் தொடங்கப்படவுள்ளது, இதைக்குறித்து சுருக்கமாக கூறமுடியுமா? 

பதில்: தி ரைஸ் எழுமின் அமைப்பு, அனைத்துலக தமிழர்களையும் ஒன்றிணைக்கும் பணியை செய்துவருகிறது. இதில் பொறியாளர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், இலக்கியவாதிகள், திறனாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் பணி செய்யும் தமிழ் மருத்துவர்களை, மருத்து வல்லுநர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் அனைத்துலக தமிழ் மருத்துவர்கள் மாமன்றம் தொடங்கப்படவுள்ளது.

கேள்வி: எந்தெந்த நாடுகளில் உள்ள மருத்துவர்கள் சென்னை மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்கள்? 

பதில்: லண்டன், துபாய், கனடா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் மருத்துவர்கள் இந்த மாநாட்டிலும், மாமன்றத்தின் தொடக்க விழாவிலும் கலந்துகொள்ள உள்ளார்கள். 

கேள்வி: அனைத்துலக தமிழ் மருத்துவர்கள் மாமன்றத்தின் (Tamil Doctors Internationals) நோக்கம் என்ன? 

பதில்: பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் மருத்துவர்களை ஒன்றிணைத்து ஒரு நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம்.இந்த மாமன்றத்தின் குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை வகுத்துள்ளோம். இப்போது உடனடியான திட்டம் எனக் கூற வேண்டுமானால், உதவி தேவைப்படுவோருக்கு உதவவும், குறிப்பாக யாருக்காவது நிதி தேவை இருப்பின் அதற்கான முதலீடு உதவிகளை செய்யவது, நர்சிங் கல்லூரி, பாரா மெடிக்கல் கல்லூரி போன்ற நிறுவனங்களை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது, யாரை தொடர்புகொள்வது என தெரியாமல் இருக்கும், அவர்களுக்கு உதவுவது போன்று ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். 

கேள்வி: அனைத்துலகத் தமிழ் மருத்துவர்கள் மாமன்றத்திற்கு தலைமை பொறுப்பேற்றிருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?  

பதில்: அனைத்துலகத் தமிழ் மருத்துவர்கள் மாமன்றம் ஒரு புது முயற்சி, நாங்கள் இதை இப்பொழுதுதான் முதல்முறையாக செய்கிறோம். தமிழ், தமிழர்கள், தமிழ் மருத்துவர்களை ஒன்றிணைத்து செய்யும் இந்த முயற்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முயற்சி தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும், உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் பேருதவியாக அமையும். 

கேள்வி: அனைத்துலகத் தமிழ் மருத்துவர்கள் மாமன்றத்தில் யாரெல்லாம் இணையலாம்? 

பதில்: மருத்துவர்கள், செவிலியர்கள், பாரா மெடிக்கல் பிரிவைச் சேர்ந்தவர்கள் என மருத்துவத்துறையைச் சேர்ந்த தமிழர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம்.

கேள்வி: அனைத்துலகத் தமிழ் மருத்துவர்கள் மாமன்றத்தின் எதிர்கால திட்டம் என்ன? 

பதில்: தற்போதைக்கு, தமிழ்நாடு மற்றும் உலகின் பல நாடுகளில் முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மருத்துவர்கள், மருத்துவத்துறைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து, தமிழர்கள் எதிர்காலத்தில் புகழ்மிக்கவார்களாக வாழ வேண்டும், சர்வதேச மருத்துவத்துறையில் சிறந்து விளங்குபவர்களாக தமிழர்கள் திகழ வேண்டும் என்ற கனவுத் திட்டத்தோடு செயல்பட்டு வருகிறோம். 

உங்களுடைய நெருக்கடியான பணிச்சூழலுக்கு மத்தியில் thisistamil.com டிஜிட்டல் செய்தி ஊடகத்திற்காக பேட்டி அளித்ததற்கு பி வெல் மருத்துவ குழுமத்தின் தலைவர் வெற்றிவேல் அவர்களுக்கு நன்றி.