உலக காடுகள் தினம்.. மனித வாழ்வியலில் பின்னிப் பிணைந்துள்ள ஓர் அற்புதம்.!

for

 

நாம் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாலும், புத்தகத்தில் எழுதினாலும், காய்ச்சலுக்கு மருந்து சாப்பிடாலும், வீடு கட்டினாலும் என எல்லா செயல்களிலும்  காடுகளுக்குத் தொடர்பு உள்ளது. நம் வாழ்வின் பல அம்சங்களில் காடுகள் ஏதோ ஒரு வகையில் நம்முடன் பின்னிப் பிணைந்துள்ளது.

சமீப காலமாக கொரோனா தொற்றுநோய், பொருளாதார நெருக்கடிகள், உணவுப் பாதுகாப்பின்மை, வறுமை, காலநிலை மாற்றம், நிலச் சீரழிவு, நீர் மாசுபாடு மற்றும் உயிர் இழப்புகள் என மனிதகுலம் பல உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள பல சவால்களை எதிர்கொள்வதில் காடுகள் பெரிய பங்களிப்பை அளிக்கின்றன. காடுகளுக்குக் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் திறன் உள்ளது. காடுகள் கிராமப்புற சமூகங்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கக்கூடிய சுற்றுச்சூழலை அமைத்துத் தருகிறது 

நிலையான மேலாண்மைக்கும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், காடுகள் மிகவும் முக்கியமானது. காடுகள் வறுமையை  ஒழிப்பதிலும் நிலையான வளர்ச்சி தருவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும்கூட, பொருளாதாரம் மற்றும் சுகாதார நலன் கொண்ட காடுகள், காட்டுத்தீ, பூச்சிகள், வறட்சி மற்றும் காடு அழிப்பு ஆகியவற்றால் தற்போது ஆபத்தில் உள்ளது.

அனைத்து வகையான காடுகளின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2012-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி சர்வதேச காடுகள் தினமாக அறிவித்தது. மரம் நடும் பிரச்சாரம் போன்ற காடுகள் மற்றும் மரங்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச முயற்சிகளை மேற்கொள்ள பல்வேறு நாடுகள் இதை கடைப்பிடித்து வருகின்றன. இதன் அமைப்பாளர்கள் காடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), அரசாங்கங்களுடன் இணைந்து, காடுகள் தொடர்புடைய  அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றனர்.

இந்த காடுகள் நம்முடைய  ஆரோக்கியத்திற்காகப் பல விசயங்களைத் தருகின்றன. அவை, தண்ணீரைச் சுத்தப்படுத்துதல், காற்றைச் சுத்தப்படுத்துதல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல், உணவு  மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை வழங்குதல், மேலும் நமது நல்வாழ்வை மேம்படுத்துதல் போன்ற நிறைய நன்மைகளைக் காடுகள் நமக்குத் தருகின்றது. இந்த விலைமதிப்பற்ற இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் கையில் தான் உள்ளது.

இந்த 2023-ம் ஆண்டு சர்வதேச காடுகள் தினத்தன்று நாம் காட்டிடமிருந்து எடுப்பது மட்டுமல்லாமல், நாம் காட்டிற்குக் தேவையானவற்றை கொடுக்கவும் வேண்டும். இதன்மூலம், காடுகள் மேன்மையடைவதுடன், இனி வரும் நம் சந்ததியினரும் மேன்மையடைவார்கள்.