உலகக் கோப்பை செஸ் போட்டி ; சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன் - Runner Up ஆன தமிழகத்தின் பிரக்ஞானந்தா

world cup chess pragnanandha

முடிவுக்கு வந்த உலகக் கோப்பை செஸ் போட்டி

உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜர்பைஜானில் நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளிலிருந்து செஸ் வீரர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து பலரும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், இந்தியாவில் வளரும் நம்பிக்கை நட்சத்திரமான தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா இறுதி போட்டி வரை முன்னேறி அசத்தினார். 

டிராவில் முடிந்த முதலாவது ஆட்டம்
 
இறுதிபோட்டிக்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று அஜர்பைஜானின் தலைநகர் பாகுவில் இறுதிப் போட்டி நடந்தது. இந்திய செஸ் மாஸ்டரும் தமிழகத்தை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தாவும், உலகின் முதல்நிலை வீரரும் 5 முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்செனும் மோதினர், இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

2வது ஆட்டமும் டிரா

இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று நடந்தது. இதில் ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருந்தனர். 

பிரக்ஞானந்தாவுக்கு நேரம் குறைவாக இருந்தது

இதன்பின்னர் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட 3 வது சுற்று ஆட்டம் தொடங்கியது. வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் சுற்று தொடங்கி நடைபெற்றது. முதல் சுற்றில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றார். டை பிரேக்கர் முதல் சுற்றில் வெற்றி பெற பிரக்ஞானந்தா இறுதி வரை போராடியும் வெற்றி பெற முடியாமல் போனது. இதனால், கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார். இந்த ஆட்டத்தில், 41 நகர்த்தல்கள் வரை போட்டி சமநிலையில் காணப்பட்டது. எனினும், பிரக்ஞானந்தாவுக்கு நேரம் குறைவாக இருந்தது. இதனால், அவரால் வெற்றி பெற முடியாமல் போனது.

6 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சன்

சிறிது நேரத்திற்கு பின்னர் 2-வது சுற்று போட்டி தொடங்கியது. இதில், கருப்பு காய்களுடன் போட்டியை ஆட தொடங்கிய பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இந்த சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், ரேபிட் முறையில் 2 போட்டிகள் நடைபெறும் சூழல் இருந்தது. ஆனால் 2-வது சுற்று ஆட்டத்திலும் கார்ல்சன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இதனால், பிரக்ஞானந்தா வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருந்தது. கார்ல்சன் அதிரடியாக காய்களை நகர்த்தி வெற்றி பெற்றார். இதனால், உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் நார்வே வீரர் கார்ல்சன் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஏற்கனவே 5 முறை செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு இது 6 வது சாம்பியன் பட்டமாகும். இதனால் தமிழகத்தின் பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 

மோடி வாழ்த்து

வெள்ளி பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தி குறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , செஸ் உலகக் கோப்பையில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்திற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர் தனது திறமைகளை வெளிப்படுத்தினார். இறுதிப் போட்டியில் வலிமை மிக்க மேக்னஸ் கார்ல்செனுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தார் . இது சிறிய சாதனையல்ல. அவரது வரவிருக்கும் போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரக்ஞானந்தாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உலகக் கோப்பை செஸ் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய, சென்னையின் பெருமையாக விளங்கும் பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் முன்னனி செஸ் வீரர்கள் நகமுரா மற்றும் காராவ்னா ஆகியோரை வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவின் சாதனை 140 கோடி கனவுகளுடன் எதிரொலிக்கிறது என்றும், முழு தேசமும் அவரை நினைத்து பெருமை கொள்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.