3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.!

sup aa

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? எனவும், 2020-ல் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் 3 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. 

ஆளுநர் Vs தமிழ்நாடு 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதும், அதனை திருப்பி அனுப்பி விளக்கம் கேட்பதும் என தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதுமட்டுமல்லாமல், அரசு கொண்டிருக்கக்கூடிய கொள்கைகளோடு மோதுவது, அரசை விமர்சனம் செய்வது என தொடர்ந்து ஆளுநர் திமுக தலைமையிலான அரசோடு மோதல்போக்கை கையாண்டு வந்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணி தமிழ்நாடு அரசும் ஆளுநருக்கெதிராக உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டது. ஆளுநருக்கு இதுமட்டும் போதாது என்று சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி ஆளுநர் திருப்பி அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருகே அனுப்பி வைத்தது. 

நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை

இந்தநிலையில், ஆளுநருக்கெதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (நவம்பர்-20) தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில்; சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், சட்டமன்றம் இயற்றிய மசோதா தவறாக இருந்தாலும் அதனை நிறுத்திவைக்க ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?என தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பியது. அதற்கு, சட்டப்பேரவையில் தவறான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என தலைமை நீதிபதி தெரிவித்தார். 

மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படக்கூடாது

அடுத்ததாக, 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிதி மசோதாவாகத்தான் பார்க்க வேண்டும் எனவும், ஏற்கனவே அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது திருப்பி அனுப்புவது ஏன்? எனவும், உரிய காரணங்கள் இன்றி மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டியது. மேலும், மாநில அரசு, அமைச்சர்கள் ஆலோசனை அடிப்படையில் ஒரு ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும், மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படக்கூடாது என்றும், மசோதா நிராகரிக்கப்படுவதாக வெறுமனே சொல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என தமிழ்நாடு அரசு வாதத்தை முன்வைத்தது. 

ஆளுநருக்கு 3 அதிகாரங்கள் உள்ளது

அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? எனவும், 2020-ல் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் 3 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது, ஆளுநருக்கு உள்ள துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு பறிக்கிறது என்று மத்திய அரசு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமனி வாதத்தை முன்வைத்தார். அப்போது, அரசியலமைப்பு சட்டம் 200-ன் கீழ், ஆளுநருக்கு 3 அதிகாரங்கள் உள்ளது. அது, ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் தரலாம், நிறுத்தி வைக்கலாம், குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். 

நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அடுத்தபடியாக, ஒரு மசோதாவை பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றினால் அதை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைக்க முடியுமா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் மசோதாவை அனுப்பி வைக்க முடியாது என வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். இறுதியாக, மசோதாக்கள் மீது சில பரிசீலனைகள் செய்ய வேண்டியுள்ளதால் ஆளுநருக்கு அவகாசம் வழங்க ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில், ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.