வாச்சாத்தி வன்கொடுமை.. வழக்கும்.. அதன் வரலாறும்.! 

vachathi

தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி நகரங்களுக்கிடையே அமைந்திருக்கும் கல்வராயன் மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்திருப்பதுதான் வாச்சாத்தி கிராமம். பசுமையான கிராமத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பவர்கள் இந்த மலைவாழ் பழங்குடி மக்கள். 1992-களில் 700-க்கும் குறைவான மக்கள் தொகையோடு இயங்கி வந்ததுதான் வாச்சாத்தி கிராமம். அவர்களின் தினசரி வாழ்க்கையாக விவசாயம் மற்றும் காடுகளில் வேலை செய்து வந்தவர்கள் தான் இந்த வாச்சாத்தி மக்கள். 

இப்படிப்பட்ட சூழலுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த வாச்சாத்தி மக்களுக்கு 1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவம் தான் இன்றளவும் உலக அரங்கில் பேசப்படும் ஒரு துயர சம்பவம். 1992-ல் ஜூன் 20-ல் வாச்சாத்தியில் அப்படி என்ன நடந்தது.. எதனால் நடந்தது.. அந்த வழக்கின் பின்னணி என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். 

வாச்சாத்தி மக்கள் சந்தன மரத்தை பதுக்கி வைத்து கடத்துவதாகவும், வீரப்பனுக்கு சந்தன மரம் கடத்துவதில் உதவி புரிந்ததாகவும் அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதை அடிப்படையாக வைத்துதான் 1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி வாச்சாத்தி கிராமத்தை சுற்றி வளைத்தனர் அரசு அதிகாரிகள். 155 வனத்துறையினர், 108 காவல்துறை அதிகாரிகள், 6 வருவாய்த்துறை அதிகாரிகள் என மொத்தம் 269 பேர் வாச்சாத்தி கிராமத்தை சோதனை செய்ய ஆரம்பித்தனர். ஜூன் 21-ம் தேதி சந்தன மரம் கடத்தியதாக அக்கிராமத்தைச் சேர்ந்த 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் என மொத்தம் 133 பேரை கைது செய்தனர்.

ஜூன் 22-ம் தேதி சோதனையின்போது அக்கிராம மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டது, முதியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது, 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். மறுநாள் அதாவது ஜூன் 23-ம் தேதி பாதிக்கப்பட்ட அக்கிராம மக்கள் அரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதன் பிறகே, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதையடுத்து 1993-ம் ஆண்டு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதன்பிறகு, 1995-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையின் அடிப்படையில் 269 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். 1996-ல் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சிபிஐ. அதன்பிறகு 2008-ம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. வழக்கு மாற்றப்பட்டதையடுத்து, 2011-ம் ஆண்டு இதே நாளில் அதாவது செப்டம்பர் 29-ம் தேதி தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார். 

அதன் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 51 பேர் விசாரணை காலகட்டத்தில் உயிரிழந்தனர். அதை தவிர்த்து உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து உத்தரவிட்டார் நீதிபதி. 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், மற்ற பேருக்கு ஒன்று முதல் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டிருந்தார் தர்மபுரி மாவட்ட நீதிபதி குமரகுரு. நாட்டிலேயே ஒரு வழக்கில் அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்காக இருந்ததால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது இந்த வழக்கின் தீர்ப்பு. 

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதைத்தொடர்ந்து, 2023 மார்ச் மாதம் 04-ம் தேதி வழக்கு சம்பந்தமான இடங்கள் மற்றும் மக்களிடையே நேரில் சென்று விசாரணை நடத்தினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன். இருதரப்பு விசாரணை முடிந்தபிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி. இந்தநிலையில், இன்று செப்-29-ம் தேதி அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.  

தீர்ப்பில், 215 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தும், தண்டிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்தார். மேலும், அப்போதைய கலெக்டர், எஸ்.பி, வன அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதில் 5 லட்சம் ரூபாயை குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும், மீதி 5 லட்ச ரூபாயை அரசு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

30 ஆண்டுகால நீங்காத வடுவிற்கும், பாலியல் வன்கொடுமைக்கும் இந்த நிவாரணமும், தண்டனையும் போதுமானதாக இருக்குமா இல்லை இன்னும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமா என்பதை பார்வையாளர்களின் பார்வைக்கு விட்டுவிடுகிறேன்.. இந்த தீர்ப்பை பொறுத்தவரையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக அமைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை..