இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையத்தை திறந்து வைத்த டிம் குக் 

apple store in india

சமூக அந்தஸ்தான ஆப்பிள் ஃபோன்

தொழில்நுட்ப உலகின் அரசனாக வலம் வரும் ஆப்பிள் நிறுவனம் அதன் தொடக்கம் காலம் முதலே கோலோச்சி வருகிறது. உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கு பெரிய வாடிக்கையாளர் கூட்டமே இருந்து வருகிறது. தற்போதைய காலத்தில் ஆப்பிள் போன் வைத்திருப்பது சமூக அந்தஸ்தாகவே பார்க்கப்படுகிறது. அதன் விலை அதிகம் என்றாலும் அந்நிறுவனத்தின் தரம் மற்ற நிறுவனங்களை விட மெச்சும்படியாகவே உள்ளது. 

இந்தியாவில் அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள்

மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஆப்பிள் போன்களுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் வேற எந்த நாடுகளிலுமே இல்லை என்றே கூறலாம். அந்த அளவும் ஆப்பிள் மோகம் இந்தியாவில் அதிகரித்து உள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் தொடங்கப்பட்ட காலம் முதலே இந்தியாவில் நேரடி விற்பனையை நடத்தியதில்லை என்பது பலரின் ஏக்கமாகவே இருந்து வருகிறது. மேலும், இந்தியாவில் நேரடி விற்பனை நிலையத்தை அமைக்க பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இந்தியாவில் தனது முதல் நேரடி விற்பனையை தொடங்கியுள்ளது.

மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா வணிக வளாகத்தில் தனது நேரடி விற்பனயை தொடங்கப்பட்டிருப்பது ஆப்பிள் விரும்பிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தனது மகிழ்ச்சியை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா வந்த ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு முதல் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிலையத்தை திறப்பதற்காக ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் இந்தியாவிற்கு வருகை தந்ததும் பேசு பொருளாகியுள்ளது. டிம் இந்தியாவிற்கு வந்ததையொட்டி பாரம்பரிய முறைப்படி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்தார். புதிதாக தொடங்கப்பட்ட இந்த நிலையத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் இனி ஆப்பிள் நிறுவன பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்தியாவில் உள்ள நேரடி விற்பனை நிலையத்திற்கும் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.