திருப்பி அனுப்பிய ஆளுநர்.. திருப்பி அடித்த அரசு.! 

rn ta

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருக்கும் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியிருந்தநிலையில், வரும் 18-ம் தேதி சிறப்பு சட்டமன்றத்தைக்கூட்டி மசோதாக்களை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஆளுநருக்கெதிராக தமிழ்நாடு அரசு வழக்கு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மைக்காலமாகவே தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருகிறார் என்று தொடர்ந்து தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாகவே தொடர்ந்து ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல்போக்கு என்பது நீடித்து வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநராகிய ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாகவும், கிடப்பில் கிடக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க உத்தரவிடும்படியும் ஆளுநருக்கெதிராக தமிழ்நாடு அரசு கடந்த அக்-31-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆளுநரை கடிந்த உச்சநீதிமன்றம்

தீர்ப்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் செயலாற்றி இருக்க வேண்டும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா ?. அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு வழக்கு வந்த பிறகு ஆளுநர்கள் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்

இந்தநிலையில், தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய,  நீண்டகாலமாக நிலுவையிலுள்ள 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பினார்.  மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர். ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள மசோதாக்களில் பெரும்பாலானாவை பல்கலைக்கழகங்கள் தொடர்புடையவை எனத் தகவல் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை உடனடியாக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு. 

திருப்பி அடித்த அரசு

இந்தநிலையில், நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வரும் 18-ம் தேதி சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டி மசோதாக்களை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றியது போலவே தற்போது ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்ற அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்றபோதிலும், மீண்டும் சட்டப்பேரவையில் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.