தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் 2023 - Highlights.!

leditid

ஆளுநர் vs அரசு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதும், அதனை திருப்பி அனுப்பி விளக்கம் கேட்பதும் என தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதுமட்டுமல்லாமல், அரசு கொண்டிருக்கக்கூடிய கொள்கைகளோடு மோதுவது, அரசை விமர்சனம் செய்வது என தொடர்ந்து ஆளுநர் திமுக தலைமையிலான அரசோடு மோதல்போக்கை கையாண்டு வந்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணி தமிழ்நாடு அரசும் ஆளுநருக்கெதிராக உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டது. ஆளுநருக்கு இதுமட்டும் போதாது என்று சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி ஆளுநர் திருப்பி அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருகே அனுப்பி வைக்க முடிவு செய்தது தமிழ்நாடு அரசு. 

தனித்தீர்மானம் - முன்மொழிந்த முதல்வர்.!

அதனடிப்படையில்தான், இன்று நவம்பர் 18 சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. இதில், பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் பங்கேற்குமா என்று எதிர்பார்த்த நிலையில், இரு கட்சிகளும் பங்கேற்றது. காரணம் குறிப்பிடாமல் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல என்று சட்டமன்றம் கருதுவதாக கூறி, தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர் தொடர்ச்சியாக, திமுக கூட்டணி கட்சிகள் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து பேசினர். அதற்குப் பிறகுதான் சிறப்பு சட்டமன்றக்கூட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. 

பாஜக வெளிநடப்பு

தனித்தீர்மானம் தொடர்பாக பேச ஆரம்பித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், வேந்தர்களை நியமனம் செய்வது ஆளுநருக்குத்தான் அதிகாரம் வேண்டும் என்று 1998-ம் ஆண்டு கலைஞர் அவர்கள் இதே சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார் என்பதை குறிப்பிட்டு, ஆளுநரோடு அரசு மேன்மையான போகை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி பாஜக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

வரலாற்றைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

அடுத்தபடியாக, எதிர்க்கட்சித் தலைவர் தனித்தீர்மானம் மீது பேச ஆரம்பித்தபோது சட்டமன்றம் சற்றும் கூடுதலாக விறுவிறுப்பானது. பல்கலைக்கழக வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக 1994-ம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவையில் பேசிய பேராசிரியர் க. அன்பழகன் பேசியதை சுட்டிக்காட்டினார். அதில்,  "கடந்த கால அரசு எல்லா பல்கலைக்கழகங்களிலும் முதலமைச்சர் வேந்தராக அமைய வேண்டும் என்பதற்காக ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். அந்த நோக்கம் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நோக்கம் அல்ல. முதலமைச்சர் அவர்களுக்கு எத்தனையோ வகைகளில் மதிப்பு கிடைக்கும். ஆனால், அப்படி ஒரு சட்டம் வருவதன் மூலமாக சுய உரிமையோடு கல்வி வளர வேண்டுமென்றோ பொதுக்கொள்கைக்கு நேர்மாறான கொள்கை நாட்டப்பட்டது. அரசாங்கத்தினுடைய கொள்கையோ நோக்கமோ வலியுறுத்தப்படுவதற்கு வாயிலாக, இது அமைகிற காரணத்தினால் பல்கலைக்கழக தனிஉரிமை கைவிடப்படுவதாக எண்ணம் தருகிறது. ஆகவே, இந்த அரசு பல்கலைக்கழகங்கள் தனித்து சுயமாக இயங்குகிற வாய்ப்பை கெடுக்கக்கூடாது என்பதற்காக பின்வாங்குவதாக, கைவிடுவதாக அறிவிக்கப்படுகிறது" என்று திமுகவைச் சேர்ந்த பேராசிரியர் அன்பழகன் பேசியதை எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார். 

வழக்கு நடைபெறும்போது ஏன் கூட்டம்? 

மேலும், ஆளுநருக்கெதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. அதன் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கிற்க்கான தீர்ப்பு வருவதற்கு முன்னே சிறப்பு கூட்டத்தொடரை ஏன் கூட்ட வேண்டும் என்றும், இதற்கான காரணம் என்ன என்றும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

நெஞ்சுக்கு நீதியை சுட்டிக்காட்டிய இபிஎஸ்

அடுத்ததாக, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் இருந்ததை குறிப்பிட்டு பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதில், "1994ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தமிழ்நாட்டில் அப்போதிருந்த 13 பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு ஆளுநரிடம் இருந்ததை மாற்றி முதல்வர் தான் பல்கலைக்கழகங்களில் வேந்தராக இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தனர். பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டபோதிலும், அதற்கு ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்விக்குறி அப்போதே பெரிதாக எழுந்தது. ஏனென்றால், ஆந்திராவில் என்.டி ராமராவ் அவர்கள் முதல்வராக இருந்தபோது இதுபோன்ற சட்டத்தை அங்கு நிறைவேற்றினார். அதற்குப்பிறகு, அந்த மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்ற திரு சென்னாரெட்டி அவர்கள் அந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டு ஆளுநரே வேந்தராக நீடிக்க வழிசெய்தார். எனவே, தமிழகத்தில் இருந்த இந்த சட்டத்திற்கு ஒப்புதல் தருவாரா என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது. மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி ஏற்பட்டால், அந்தக் காலத்தில் முதல்வர் இருக்க மாட்டாரே, அப்போது யார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பார்கள் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் கேட்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் திமு கழகத்தின் சார்பில் இந்த சட்டம் தேவையில்லை என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது" என்று கலைஞர் எழுதியதைச் சுட்டிக்காட்டி வேந்தர் பற்றி அன்றே முடிவெடுத்திருந்தால் இன்றைக்கு இந்த பிரச்னை வந்திருக்காது என்று பேசினார். 

WithHold என்றால் நிலுவையில் இருப்பதாக பொருள் - இபிஎஸ்

அதற்கு பதில் அளித்த அவை முன்னவர் துரைமுருகன் சிண்டிகேட், செனட் இரண்டும் சேர்ந்து தீர்மானம் போட்டாலும் கையெழுத்து போட மாட்டேன் என்பது கடைந்தெடுத்த சர்வாதிகாரத்தனம் என்று அதற்கு பதிலளித்தார். அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆளுநர் மசோதாக்களை WithHold செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதாவது, நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருக்கிறார். நிராகரிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படவில்லை. மசோதாக்களை நிலுவையில் இருப்பதாகத்தான் பொருள்படுகிறது. எனவே, மசோதாக்களை மறு ஆய்வு செய்வதில் சட்ட சிக்கல் இருக்குமா என்பதையும் அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று இபிஎஸ் கோரிக்கை விடுத்தார்.

WithHold என்றால் நிராகரிக்கிறார் என்றே பொருள் - சபாநாயகர்

அப்போது குறுக்கிட்ட அவைத்தலைவர் அப்பாவு, மசோதாக்களை ஆளுநர் WithHold செய்கிறார் என்றால் அரசு ஒப்புதல் அளிக்காமல் நிராகரிக்கிறார் என்றே பொருள். மசோதாக்களை மறு ஆய்வு செய்வதற்கான அனுமதி அளிக்க சபாநாயகர் என்ற அடிப்படையில் எனக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே, மசோதாக்கள் மறு ஆய்வுக்கு உட்பட்டதுதான். எந்தவித மாற்றங்களும் இல்லாமல் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்படும். ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்று சபாநாயகர் தெரிவித்தார். 

குறுக்கிட்ட அப்பாவு - கோபமான இபிஎஸ்

சபாநாயகர் குறுக்கிட்டதால் கோபமடைந்த எதிர்க்கட்சித் தலைவர்,  சபாநாயகர் அவர்களே நீங்கள் நடுநிலைமையோடு இருக்க வேண்டும். அமைச்சர்கள், முதலமைச்சர் சொல்ல வேண்டிய பதில்களை எல்லாம் நீங்களே சொல்லிவிடுகிறீர்கள். எல்லா இலாகாவுக்கும் நீங்களே பதில் சொல்கிறீர்கள். நாங்கள் பேசுவது வெளியே வருவதில்லை. நீங்கள் பேசுவது மட்டும் வெளியே வருகிறது என்று இபிஎஸ் கோபமடைந்தார். அப்போது, இது எனக்கான கேள்வி தான் என்றும், என்னுடைய கடமையைத்தான் செய்தேன் என்றும் சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார். 

ஆளுநர் நாடகாமாடுகிறார் - முதல்வர்

அதன்பிறகு, முதலமைச்சர் பேச ஆரம்பித்தபோது, ஆளுநர் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில், சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை திருப்பி அனுப்பியிருப்பது சட்டமன்றத்தை அவமதிப்பதாகும். மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எப்படி முட்டுக்கட்டை போடலாம் என்று நாள்தோறும் யோசித்து செயல்படுகிறார் ஆளுநர். சமுகநீதியும் ஆளுநருக்கு பிரச்னையாக இருக்கிறது. ஆளுநர்கள் மக்களாட்சி தத்துவத்துக்கு அடங்கி நடக்க வேண்டும். உச்சநீதிமன்றம், ஆளுநரின் தலையில் ஓங்கி கொட்டு வைத்தவுடன் அவசர அவசரமாக கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதுமென நாடகமாடுகிறார் என்று பேசினார். 

தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

அடுத்ததாக, ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை திமுக அரசு மாற்றி விட்டதாக கூறி அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. அதற்கு, என்னென்ன மசோதாக்களை திருப்பி அனுப்புகிறோம் என்பது தெரியாமலே அதிமுக வெளிநடப்பு செய்திருக்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்தார். இறுதியாக, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் ஒருமனதாக சிறப்பு சட்டப்பேரவைக்கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனி அந்த மசோதாக்கள் அனைத்தும் மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும். அந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆளுநர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.