அரசியலின் சூப்பர் ஞாயிறு.. என்ன நடந்தது.. இதோ ஓர் சுவாரஸ்யமான பின்னணி.!

super sunday

அரசியலைப் பொறுத்தவரை கடந்த ஞாயிற்றுக்கிழமையை சூப்பர் ஞாயிறு என்றே சொல்லலாம். ஒரு பக்கம் அதிமுக பொன் விழா எழுச்சி மாநாடு. மறுபக்கம் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம். இன்னொரு முனையில் ஓபிஎஸ்-ன் மாவட்ட செயலாளர் கூட்டம் என அன்றைய தினமே களைகட்டியது. அதிமுகவின் எழுச்சி மாநாட்டை கண்டு பயந்தே திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர். 

அதிமுகவினர் நடத்தும் மாநாடு எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என பதிலடி தந்தனர் திமுகவினர். ஒரு அமைச்சராக இருப்பவர் எப்படி உண்ணாவிரத போராட்டம் நடத்தலாம் எனவும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதற்கு பதில் அளித்த திமுகவினர்... அரிசியை கூடுதலாக ஒதுக்க சொல்லி அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் உண்ணாவிரதம் இருந்ததையும், காவிரி நீருக்காக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது உண்ணாவிரதம் இருந்ததையும் சுட்டிக் காட்டுகின்றனர். 

ஏன்.. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உண்ணாவிரதம் இருந்தது எந்த கணக்கில் வரும் எனவும் கேள்வி கேட்கின்றனர். அது மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் அந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசியபோது ஒரு சட்டமன்ற உறுப்பினராகவோ ஒரு அமைச்சராகவோ இந்த போராட்டத்தில் தான் கலந்து கொள்ளவில்லை எனவும், இறந்து போன மாணவர்களின் சகோதரனாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும் கவனமாக சுட்டிக் காட்டுகின்றார் ஒரு பத்திரிக்கையாளர். 

அடுத்து ஆளுநரை உதயநிதி தரக்குறைவாக பேசிவிட்டார் என்ற விமர்சனமும்  முன் வைக்கப்படுகிறது. மக்கள்தான் ஆளுநரை இப்படி வாய்க்கு வந்தபடி பேசினால் செருப்பால் அடிப்பார்கள் என உதயநிதி பேசியதாக சுட்டிக்காட்டுகிறார்கள் உடன்பிறப்புகள். என்னதான் விளக்கம் தந்தாலும் செருப்பால் அடிப்பார்கள் என்ற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் என்ற பார்வையையும் சிலர் முன்வைக்கின்றனர். உதயநிதியின் அநாகரிக பேச்சுக்காக அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஆவேசப்படுகிறார் பாஜகவின் திருப்பதி நாராயணன்.

அப்படி என்றால் அமைச்சர் ஏ.வா.வேலு பேசாததை பேசியதாக திரித்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் பிரதமர் மோடியையும் எப்போது டிஸ்மிஸ் செய்யப் போகிறீர்கள் என பதிலடி தருகின்றனர் சில உடன்பிறப்புகள். உதயநிதி பேசியதில் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது நீட்  விலக்கிற்காக அதிமுகவிடம் அவர் கோரிக்கை வைத்தது தான். வாருங்கள் பிரதமர் மோடி வீட்டுக்கு சென்று நாம் போராடுவோம், அப்படி நீட் விலக்கு கிடைக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த பெருமையையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என உதயநிதி உருக்கமாக பேசியது அதிமுகவுக்கு உள்ளபடியே நெருக்கடியை அதிகப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள். 

ஆளுநரை அதிமுக ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வியையும் நாம் ஒன்றாக இணைந்து போராடலாம் என்ற கோரிக்கையையும் எடப்பாடி பழனிச்சாமி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..