தன்பாலின திருமணம்.. சட்ட அங்கீகாரம் இல்லை.. 3 நீதிபதி எதிர்ப்பு.. 2 நீதிபதி ஆதரவு.. உச்சநீதிமன்றம் புதிய தீர்ப்பு.!

maruppu

LGBT இயற்கைக்கு எதிரானது

தன்பாலின திருமணம் என்பது மேற்கத்திய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை தன்பாலின ஈர்ப்புக்கு கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. ஆனால், தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் என்பது அங்கீகரிக்கப்படாமல் இருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண் பெண் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும் மற்றவை இயற்கைக்கு எதிரானது என்று மத்திய அரசு வகைப்படுத்தியிருந்தது. 

ஆணும் பெண்ணும் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல

இந்தநிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள், LGBTQ+ அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் என 21 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் தன்பாலின தரப்பினர் வாதிடுகையில், திருமணம் என்பது இருவர் இணைந்து வாழும் வாழ்க்கை, அதில், ஆணும் பெண்ணும் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. தன்பால் திருமணத்தை அங்கீகரிக்க மறுப்பதால் திருமணம் செய்துகொள்ள முடியாத நிலை ஏற்படுவதாகவும், அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகவும், தங்களை இரண்டாம் தர குடிமக்கள் ஆக்குகிறார்கள் என்றும் வாதிட்டனர். 

நீதிமன்றம் விசாரிக்க உரிமை உள்ளதா 

அதையடுத்து, மத்திய அரசு அளித்த பதில் வாதத்தில், திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே நடக்க முடியும் என்றும், இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்க உரிமை உள்ளதா என்று கேள்வி எழுப்பியது. மேலும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தது.

மாறுபட்ட தீர்ப்பு

இந்தநிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ரவீந்திர பட், பி.எஸ். நரசிம்மா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கத் தொடங்கியது. இதையடுத்து இந்தியாவே எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அக்-17 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு 4 மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

சாதி பார்த்து வருவதில்லை

தலைமை நீதிபதி சந்திரசூட் வாசித்த தீர்ப்பில், தன்பாலின சேர்க்கை நகர்ப்புறத்துக்கான வசதி படைத்தவர்களுக்கு மட்டுமான விவகாரம் என கருத முடியாது என்றும், மாநகரத்தில் வாழும் அனைவரும் உயர் அடுக்கு வசதி படைத்தவர்கள் என்றும் கருத முடியாது என்றும், சாதி, வர்க்கம், சமூகப் பொருளாதார வேறுபாடுகளை பார்த்து தன்பாலின ஈர்ப்பு வருவதில்லை என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். 

செல்லாது என அறிவித்தால்..!

திருமண முறை மாறாதது, நிலையானது என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறப்பு திருமணச் சட்டத்தை செல்லாது என அறிவித்தால் அது நாடு விடுதலை பெற்றதற்கு முன்பிருந்த நிலைக்கு இட்டுச் செல்லும். அதேசமயம், சிறப்பு திருமண சட்டம் குறித்து விளக்கம் அளிக்க முயன்றால் அது நாடாளுமன்றத்தின் வேலையை எடுத்துக்கொண்டதாகிவிடும் என்று தெரிவித்தார். 

நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்

அரசியல் சாசன பிரிவு 21-ன் கீழ் சுதந்திரமாக வாழும் உரிமை, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆகவே, சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், தன்பாலின இணையர்களால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை என்பதால், குழந்தை தத்தெடுப்பு ஒழுங்குமுறை தொடர்பான மத்திய அரசின் சுற்றறிக்கையில் தன் பாலினத்தவரை தவிர்த்தது அரசியலமைப்புக்கு எதிரானது என்ற ஒரு கருத்தையும் தெரிவித்தார். 

சட்ட அங்கீகாரம் இல்லை

தன்பாலின திருமணம் தொடர்பாக நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய முடியும் என்று தீர்ப்பளித்திருந்தநிலையில், தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என தற்போது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கில் 3:2 என்ற விகிதத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் அதாவது, நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி ரவீந்திர பட் மற்றும் நீதிபதி நரசிம்ஹா ஆகியோர் தன்பாலின திருமண சட்ட அங்கீகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல், தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி எஸ்.கே. கவுல் தன்பாலின திருமண சட்ட அங்கீகாரத்திற்கு ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல், Queer ஜோடிகள் தத்தெடுக்கும் உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.   

சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்யவும் மறுப்பு

இறுதியாக, தன் பாலினத்தவர்களின் உரிமைகள் தொடர்பாக ஆராய குழு அமைக்கும் மத்திய அரசின் முடிவை பதிவு செய்து கொண்டது உச்சநீதிமன்றம். திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தையோ, சட்டமன்றங்களையோ கட்டாயப்படுத்த முடியாது என்றும், தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காததால் சிறப்பு திருமணம் மற்றும் வெளிநாட்டு சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம்,   சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்யவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.