வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் உயர்வு.. EPFO-விலும் அதானி முதலீடா.? 

website post (54)

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.10 சதவிகிதத்திலிருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

5 கோடி பணியாளர்கள் பயனடைவார்கள்

டெல்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரியக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பி.எஃப் வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் உள்ள 5 கோடி பணியாளர்கள் பயனடைவார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (CBT) நேற்று நடந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF-க்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

மார்ச் 2022-ல், EPFO ​​2021-22 க்கான EPF மீதான வட்டியை 8.5 சதவீதத்தில் இருந்து அதன் ஐந்து கோடி சந்தாதாரர்களுக்கு மேலாக 8.1 சதவீதமாக குறைத்தது. 1977-78ல் EPF வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்ததில் இருந்து இது மிகக் குறைவு. 2020-21 ஆம் ஆண்டிற்கான EPF டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021-ல் CBT ஆல் முடிவு செய்யப்பட்டது. 

EPFO சதவீதம்

மத்திய அறங்காவலர் குழுவின் முடிவிற்குப் பிறகு, 2022-23க்கான EPF டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, 2022-23க்கான EPF மீதான வட்டி விகிதம் EPFO-ன் ஐந்து கோடி சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். நிதி அமைச்சகம் மூலம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே EPFO ​​வட்டி விகிதத்தை வழங்கும் என்பது கவனித்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது. 

மார்ச் 2020-ல், EPFO 2018-19-க்கு வழங்கப்பட்ட 8.65 சதவீதத்திலிருந்து 2019-20-ம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை ஏழு ஆண்டுகளில் 8.5 சதவீதமாகக் குறைத்தது. EPFO 2016-17-ல் அதன் சந்தாதாரர்களுக்கு 8.65 சதவீத வட்டி விகிதத்தையும் 2017-18 இல் 8.55 சதவீதத்தையும் வழங்கியது. 2015-16ல் வட்டி விகிதம் சற்று அதிகமாக 8.8 சதவீதமாக இருந்தது. ஓய்வூதிய நிதி அமைப்பு 2013-14 மற்றும் 2014-15-ல் 8.75 சதவீத வட்டியை வழங்கியது, இது 2012-13-ல் வழங்கப்பட்ட 8.5 சதவீதத்தை விட அதிகமாகும். 2011-12-ல் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

EPFO-விலும் அதானி முதலீடு!

இந்தநிலையில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதானி குழும பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். வருங்கால வைப்பு நிதியில் தற்போது 16 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். இவற்றில் 15 சதவீத தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நிதிகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகளில் அடங்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்றன. அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி எண்டர்ப்ரைசஸ் நிறுவனங்கள் இந்த குறியீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளதால் இவற்றிலும் முதலீடு செய்கின்றன. இதன்மூலம் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதானி நிறுவனங்கள் மறைமுகமாக முதலீடு செய்துள்ளன. பங்குச்சந்தைகளில் 2022 வரை 1.57 லட்சம் கோடி ரூபாயை EPFO முதலீடு செய்துள்ளது. 

அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அதானி பங்குகள் பயங்கரமாக சரிந்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “LIC பணம் அதானிக்கு. SBI பணம் அதானிக்கு. இப்போது EPFO பணமும் அதானிக்கு. மோடியும் அதானியும் அம்பலப்பட்ட பிறகும் மக்களின் ரிட்டயர்மெண்ட் நிதி ஏன் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது? பிரதமரே, விசாரணையும் இல்லை, பதிலும் இல்லை. ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.