Leo Success Meet.. விஜயின் பேச்சும்.. பின்னணியும்.!

Leo Success

நடிகர் விஜயின் படம் மார்க்கெட்டிற்கு வருகிறதென்றால் அப்போது இருக்கும் ஆரவாரமும் அமர்க்களமும், விஜய் அரசியலுக்கு வருவதற்க்கான எதிர்பார்ப்பும் கூடவே சேர்ந்து ஊடகங்களில் எகிரி அடிக்கும். அப்படி நடிகர் விஜய் படத்தில் பேசும் வசனத்திற்காகவும், மேடையில் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரிக்காகவும் எதிர்பார்த்து கழுகின் கண்களைப்போல் உற்று நோக்கிக்கொண்டிருக்கும் ரசிகர்களும், ஊடகங்களும் ஏராளம். அப்படி உற்று நோக்கிக்கொண்டிருந்த கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அடித்தளமாக அமைந்தது தான் Leo Success Meet. விஜய் மேடையில் பேசும் பேச்சுக்கு பின்னால் எதாவது ஒரு வகையில் பேசுபொருளாக மாறுவதும், விமர்சனமாவதும் தொடர்ந்து நாம் பார்த்த ஒன்று. அப்படி நேற்றைய தினம் நடந்த Leo Success Meet-ல் விஜய் என்ன பேசியிருக்கிறார், காக்கா கழுகு கதை சொல்லியிருக்கிறாரா இல்லை அரசியல் பேசியிருக்கிறாரா என்ற பின்னணியை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

விஜய் அரசியலுக்கு வருவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், அவர் எப்போது வருவார் என்பது யாரும் அறியாத ஒன்று. அதற்க்கான பதிலை தேடித்தான் தினந்தினம் தேடி அலைந்து கொண்டிருக்கிறது இங்குள்ள ஊடகங்கள். அப்படி, யாரும் அறியாத ஒன்றை தன்னுடைய படங்கள் மூலமாகவும், தான் பேசும் வசனம் மூலமாகவும், மேடையில் இரண்டு நிமிடம் சொல்லும் குட்டி ஸ்டோரி மூலமாகவும் தன்னுடைய ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் பொறி கொடுப்பார் நடிகர் விஜய். அந்தவகையில்தான், நவம்பர்-1ம் தேதி நடந்த Leo Success Meet-ல் தனக்கு எதிரான விமர்சனங்களுக்கும், அரசியல் வருகை பற்றியும் துப்பு கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். அந்த துப்பை தேடித்தான் ஊடுருவி உள்ளே செல்கிறது இந்தக் கட்டுரை.

நடிகர் விஜய் அண்மையில் நடித்து வெளியான படம்தான் லியோ. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வெற்றியைக் கொண்டாடும் விதமாக  நவம்பர்-1 சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் Leo Success Meet நடைபெற்றது. லியோ படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது. குறிப்பாக, விஜய் படத்தில் சிகரெட் பிடித்தது, தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தையை பேசியது என தொடர்ந்து லியோ படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. அதுமட்டுமல்லாமல், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா தடைபட்டது, லியோ படத்தின் தயாரிப்பாளருக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது என தொடர்ந்து சண்டைகளையும் சவால்களையும் சந்தித்து வந்தது லியோ.

எப்படியோ படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது. சரி, லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசிய பேச்சுக்கு வருவோம். முதலில் நாம் பார்க்க வேண்டியது காக்கா கழுகு பிரச்னை. தளபதி விஜய்தான் தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு எழுந்தபோது 'ஜெயிலர்' பட இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கழுகு கதை உற்று நோக்கப்பட்டது. அன்றைக்கு ரஜினி சொன்ன 'கழுகு' ரஜினியை குறிப்பதாகவும், 'காக்கா' என்று தளபதி விஜயை குறிப்பிட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி பேசுபொருளானது. அதற்கு லியோ வெற்றி விழாவில் விஜய் பதிலடி கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், விஜய் குட்டி ஸ்டோரி சொல்ல ஆரம்பித்து, கழுகு என்ற வார்த்தையைச் சொல்லி தன்னையே ஒரு சுற்று சுற்றியது ரசிகர்களை உணர்ச்சியின் உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றது. ஆனால், காக்கா கழுகு கதைக்கு பதிலடி கொடுக்காமல் நகர்ந்து சென்றார் விஜய். மேலும், அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளியையும் வைத்தார். அப்போது அவர் சொன்னது; புரட்சித் தலைவர் என்றால் ஒருவர்தான். நடிகர் திலகம் என்றால் ஒருவர்தான். புரட்சிக் கலைஞர் என்றால் ஒருவர்தான். உலக நாயகன் என்றால் ஒருவர்தான். "சூப்பர் ஸ்டார்" என்றால் ஒருவர்தான், தல என்றாலும் ஒருவர்தான், மக்களாகிய நீங்கள் ஆணையிடுங்கள் தளபதியாக நான் செய்து முடிக்கிறேன் என்று பேசியது விஜய்யின் மதிப்பை மக்களிடத்தில் உயர்த்தும் என்றால் அதில் மிகையிருக்காது.

அண்மைக் காலமாக விஜய் மக்கள் இயக்கம் பற்றியான பேச்சுக்கள், அவர்களின் செயல்பாடுகள், முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இதெல்லாம் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு போடும் அச்சாரம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வந்தனர். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு இரண்டடியில் தோண்டப்பட்ட அச்சாரம் அல்ல அது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மூலை முடுக்குகளுக்கும் ஊடுருவிச் செல்லும் விதமாக போடப்பட்ட ஆலமரத்தின் விதைதான் அது, என்று காலப்போக்கில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளால் நாம் அறிய முடிந்தது. 

அந்தவகையில், விஜய் அரசியலுக்கு வருவார் என்பது திட்டவட்டமானது. அதன் நீட்சியாகத்தான் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போஸ்டர்கள் மூலம் விஜய் அரசியலுக்கு வருவதற்க்கான அடித்தளத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்தனர். அந்தவகையில், லியோ பட வெற்றி விழாவில் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி பேசுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட தன்னுடைய அரசியல் பற்றி அங்கிருந்த மிர்ச்சி விஜய் 2026 என்ன என்று நடிகர் விஜயிடம் கேள்வி கேட்க, அதற்கு நடிகர் விஜயோ 2026-ல உலக கால்பந்து போட்டி என்று மலுப்பலாக பதில் சொன்னார். மிர்ச்சி விஜய் துருவி துருவி கேட்க "கப் முக்கியம் பிகிலு"ன்னு விஜய் சொன்ன அந்த வார்த்தை Leo Success Meet-ல் விஜய்யின் பேச்சும்.. பின்னணியும் என்று இப்போது நான் எழுதிக்கொண்டிருப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம். இப்படி விஜயிடம் நாம் எதிர்பார்த்த எல்லா வினாக்களுக்கும் சூசகமாக விடை கொடுத்துச் சென்றிருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ளலாம். எப்படியோ விஜய் சொன்ன அந்த 'கப் முக்கியம் பிகிலு' என்ற வார்த்தை உண்மையிலேயே அவர் குறிவைப்பது கால்பந்து 'கப்'பா இல்லை அரசியல் 'கப்'பா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.