விடைபெற்றது "இந்தாம்மா ஏய்......." 

inthamma eey

இவரின் திரை வருகைக்காகவும், பேச்சுக்காகவும், இவர் அடிக்கும் நையாண்டிக்காகவும், சரியாக இரவு 9.30 மணிக்கு சன் டிவியை தேடாத தமிழ்நாட்டு மக்களே இல்லை.. பட்டிதொட்டி எங்கும் இவர் நடித்த 'எதிர்நீச்சல்' தொடரில், 'ஆதிகுணசேகரன்' எனும் கதாபாத்திரத்தை தெரியாத ஆட்களே இல்லை.

சிலர் இவர் நடிப்பின் திறமையைக் கண்டு வியப்பது உண்டு.. சிலர் இவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை பார்த்து திட்டி தீர்த்ததும் உண்டு.. சிலர் ஆதிகுணசேகரன் நிஜ வாழ்க்கையிலும் கராராகத்தான் இருப்பார்போல என்றெல்லாம் யூகித்ததும் உண்டு.. பட்டி முதல் உலகமெல்லாம் பல்லு போன கிழவிகளெல்லோராலும் கொண்டாடப்படும் இந்த மாரிமுத்து யார்.. பார்க்கலாம்..

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரமான தேனி மாவட்டம், பசுமை நிறைந்த மண்ணில் பிறந்தவர் தான் இந்த மாரிமுத்து. இளம் வயதிலே சினிமாவின் ரசனையை அறிந்தவர். ஒரே ஒரு ஆசைதான், தமிழ் சினிமாவின் இயக்குநராக வேண்டுமென்று.. காலமும் அதற்கு கை கொடுத்தது.. கவிஞர் வைரமுத்துவின் மாணவனாக இருந்து கலைத்துறையின் கலையை கற்றுக்கொண்டவர். கண்ணும் கண்ணும் படத்தின் இயக்குநராக தன்னுடைய இயக்குநர் பணியை ஆரம்பித்த மாரிமுத்து அதையடுத்து புலிவால் திரைப்படத்தை இயக்கினார். 

இயக்குநராக வேண்டுமென்பதுதான் ஆசை.. ஆனால் காலம் அவரை வேறொரு திசையை நோக்கி இழுத்து சென்றது. ஒரு நடிகராக வாலி, உதயா, பரியேறும் பெருமாள், தற்போது வெளியான ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடிப்பின் சிகரத்திற்கு சென்றார். இவர் சின்னத்திரையில் நடித்த ஆதிகுணசேகரன் எனும் கதாபாத்திரம் தான் யார் இந்த மாரிமுத்து என்று பலராலும் இணையத்தில் தேட வைத்தது.
 
ஆதிகுணசேகரன் எனும் கதாபாத்திரத்தின் மூலமாக மக்களின் உள்ளங்களில் எட்டிப்பிடிக்க முடியாத இடத்திற்கு இவர் புகழ் ஓங்கியது என்றால் அது மிகையாகாது.  ஆதிகுணசேகரனை கொண்டாடித் தீர்த்தனர் தமிழ்நாட்டு மக்கள். அன்று தமிழ்சினிமாவும், சின்னத்திரையும் பூக்கள் தூவி வரவேற்றது. இன்று தமிழ்சினிமாவும், சின்னத்திரையும் இறுதிப்பூக்களை தூவி விடை அனுப்பி வைக்கிறது இந்த கலைஞனை.. ஆம், அந்த எதார்த்த நடிகன் இன்று நம்மோடு இல்லை.. தமிழ் மக்களின் நெஞ்சம் நொருங்க நெஞ்சின் துடிப்பை நிறுத்திக்கொண்டு வானுலகம் சென்றிருக்கிறார்.
 
எங்கிருந்து தன் பயணத்தை ஆரம்பித்தாரோ இன்று அதே இடத்திற்கு தன் பயணத்தை முடித்துக்கொண்டிருக்கிறார் மாரிமுத்து.. நடிகர் மாரிமுத்துவை இழந்தது தமிழ் மக்களுக்கு பேரிடியாக இருந்தாலும், இனியொரு ஆதிகுணசேகரன் யார் வரப்போகிறான் என்பது பற்றியான செய்தி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இருக்கலாம்.. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம்பிடித்த மாரிமுத்து எனும் இந்த ஆதிகுணசேகரனை இனி எத்தனை ஆதிகுணசேகரன்கள் வந்தாலும் மாரிமுத்துவின் இடத்தை இட்டு நிரப்ப முடியாது என்பதில் ஐயமில்லை.. 

காலம் விடைகொடுத்துவிட்டது.. சென்றுவாருங்கள்.. சென்றாலும் எங்கள் காதில் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் "இந்தாம்மா ஏய்......."