தி ரைஸ் அமைப்பு ஒருங்கிணைத்த குமரி பசுமை சங்கமம் .! 

Kumari Sangamam

தி ரைஸ் (எழுமின்) அமைப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி பசுமை சங்கமம் என்ற நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியது. 

தி ரைஸ் (எழுமின்) அமைப்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பாரம்பரிய உணவு முறையை மீட்டெடுக்கும் விதமாகவும், இயற்கை வேளாண் முறையை ஊக்குவிக்கும் விதமாகவும் பசுமை சங்கமம் என்ற நிகழ்வை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறது. ஏற்கெனவே திருவாரூரில் பசுமை சங்கமம் விழா நடைபெற்ற நிலையில், கடந்த மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரியில் ‘குமரி பசுமை சங்கமம்’ என்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் தென் மாவட்டங்களைச் சார்ந்த 28 கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு கலைப் போட்டிகளில் பங்குபெற்றனர்.  

மேலும் இந்த இரண்டு நாள் நிகழ்வில் முக்கியமானதாக பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் கேழ்வரகு லட்டு, கம்பு நெய் லட்டு, கேழ்வரகு கூழ், கேழ்வரகு கேக், திணை பாயாசம், உளுந்தம் பால், கருப்புக் கட்டி மூலம் செய்யப்பட்ட பலவகையான திண்பண்டங்கள் இடம்பெற்றன. அதைப்போல பல்வேறு வகையான வாழைப்பழங்கள் பசுமை சங்கமத்தில் கலந்துகொண்டவர்களின் மனங்களை கவர்ந்தன.  

இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், ஆகியோர் கலந்துகொண்டனர். பசுமை சங்கமத்தின் அடுத்த நிகழ்வு திருநெல்வேலியில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.