இந்தியாவில் முதல்முறையாக கேரள திருநங்கை தம்பதிக்கு பிறந்த குழந்தை! 

Trans couple Baby

இந்தியாவிலேயே முதல்முறையாக கேரளாவைச் சேர்ந்த திருநங்கை மற்றும் திருநம்பி தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. 

திருநங்கை தம்பதி

கேரளாவைச் சேர்ந்த சியா பவல் (வயது 21) பிறக்கும்போது ஆணாக இருந்துள்ளார், அதைப்போல அவரது இணையர் சாஹத் (வயது23) பிறக்கும்போது பெண்ணாக இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் இருவருமே தங்கள் பாலின மாற்றத்திற்கான சிகிச்சையில் இருந்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பெற்றோராக ஆசைப்பட்டு, குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி பிறக்கும்போது பெண் உடலோடு பிறந்த சாஹத், குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தனது பாலின மாற்று சிகிச்சைக்கான ஹார்மோன் ஊசிகள் செலுத்துவதை நிறுத்தியுள்ளார். ஏற்கெனவே அவரது உடலில் கர்ப்பப்பை இருந்ததால், அவர் ஒரு குழந்தையை தனது வயிற்றில் சுமக்க தொடங்கியுள்ளார்.

 

சமூக வலைத்தளத்தில் வைரல் 

சியா பவல் மற்றும் சாஹத் ஆகிய இருவரும் வெளிப்படையாக தங்களது காதலை, அவர்களது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துகொண்டாலும், அவர்கள் கர்ப்பமாக இருப்பதை வெளியில் பகிர்ந்துகொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாஹத் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். நடிகராக இருக்கும் திருநங்கை நேஹா அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருவருக்கும் வாழ்த்து தெரிவித்ததால், அந்த புகைப்படங்கள் வைரலாகின. மேலும் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி, சர்வதேச ஊடகமான பிபிசி நிறுவனமும், திருநங்கை தம்பதிகள் குறித்தும், அவர்களின் கர்ப்பம் குறித்தும் செய்தியாக வெளியிட்டது.   

குழந்தை பிறப்பு

இந்நிலையில் சியா மற்றும் சாஹத் தம்பதிக்கு நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்த அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் இது குறித்து சாஹத் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எங்களது நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியுள்ளது, நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.”

இந்தியாவில் தங்களது பாலினத்தை மாற்றிக்கொண்ட திருநங்கையும், திருநம்பியும் பெரும்பாலும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதோ அல்லது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட திருநங்கைகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களோடு குடும்பமாக வாழ்வதே வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாக திருநங்கை - திருநம்பி தம்பதிக்கு குழந்தை பிறந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.