தமிழ்நாட்டில் மேலும் 8 இடங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை.. ஜியோ அதிரடி அறிவிப்பு.!

5g

இந்தியாவில் மேலும் 34 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ நிறுவனம். இதில் தமிழ்நாட்டில் 8 இடங்கள் இடம் பெற்றிருக்கிறன. 

இணையப் புரட்சி

இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி அளவுக்கு செல்போன் சேவை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், உள்ளிட்ட முன்னணி நிறுனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் செல்போன் நெட்வொர்க் வர்த்தகம் ஏற்றம் கண்டுதான் வருகின்றன. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ இந்தியாவில் இணையப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் 34 நகரங்களில்

தரமான 4ஜி இணைய சேவையை வழங்கியதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. தற்போது, ஜியோ நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஜியோ 5ஜி சேவை வழங்கும் எல்லையை அதிகப்படுத்தி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது ட்ரூ 5ஜி சேவைகளை நாடு முழுவதும் 34 புதிய நகரங்களில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 8 நகரங்களில்

இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 34 நகரங்களில் நிறுவனத்தின் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில், தமிழ்நாட்டின் ஆம்பூர், சிதம்பரம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகாசி, திருச்செங்கோடு, விழுப்புரம் ஆகிய நகரங்களும் அடங்கும்.

ஏற்கனவே, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர், வேலூர் ஆகிய நகரங்களில் இந்த சேவையை நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. தமிழ்நாட்டில் மட்டும் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதற்காக நிறுவனம் ரூ.40,446 கோடி முதலீடு செய்துள்ளது.

தற்போது சேர்க்கப்பட்டுள்ள 34 நகரங்களையும் சேர்த்து, நாடு முழுவதும் 365 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை 120 நாள்களுக்குள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நாடு முழுவதும் அந்த சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.