'கேங்மேன்' பணிக்கு பணி நியமன ஆணை வழங்குக.. ஓபிஎஸ் வலியுறுத்தல்.!

gangman

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் ‘கேங்மேன்’ பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்க  திமுக அரசை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா காரணமாக பணி நியமன ஆணை வழங்கவில்லை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள், குறிப்பாக களப் பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதன் காரணமாக, அன்றாடப் பணிகளை மேற்கொள்ள இயலாமல் நிர்வாகம் திணறிக் கொண்டிருப்பதும், அடிக்கடி மின் சாதனங்கள் பழுதடைந்து மின் வெட்டு ஏற்படுவதும், இதன் காரணமாக மக்கள் அவதிப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் 'கேங்மேன்' பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, இந்தத் தேர்வில் 5,493 பேர் தேர்ச்சி பெற்றதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கொரோனா தொற்று நோய் காரணமாக பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், 07-09-2021 அன்று எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அப்போதைய மாண்புமிகு எரிசக்தி துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள மொத்தப் பணியிடங்கள் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 631 என்றும், இதில் 56,877 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல் அகராதியில் கிடப்பில் போடு என்று பொருள்

மேலும் அவர் பேசுகையில், மின்சாரத் துறையில் பல்வேறு நிலைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றக் கூடியவர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வைத்துள்ளார்கள் என்றும், அதேபோல விடுபட்ட கேங்மேன் எங்களுக்கு அந்தப் பணியை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்திருக்கின்றார்கள் என்றும் தெரிவித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி வரக்கூடிய காலங்களில் இதுகுறித்து துறை விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இவ்வாறு அப்போதைய மாண்புமிகு அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தெரிவித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகள் கடந்தும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எவ்விதமான வழிகாட்டுதலையும் அறிவிக்காதது தி.மு.க. அரசின் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒருவேளை, 'திராவிட மாடல்' அகராதியில் 'விரைந்து' என்றால் ‘கிடப்பில் போடு' என்று பொருள் போலும்!

பணிநியமன ஆணைகள் வழங்குவதுதான் முறையான செயல்

மூன்றரை இலட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்பவர்களைகூட 28 மாத காலம் காத்திருக்க வைப்பது என்பது கடும் கண்டனத்திற்குரியது. பணி நியமன ஆணைகள் வரும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில், முதலமைச்சரின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தேர்ச்சிபெற்றவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக மின் வாரியத் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியதோடு, இருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தால் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்பவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்குவதுதான் முறையான செயல்.

தி.மு.க. அரசின் கூற்றுபடியே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் 50,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த தி.மு.க. அரசிற்கு என்ன பிரச்சனை என்பது புரியாத புதிராக இருக்கிறது. இது தி.மு.க. அரசின் வஞ்சகத் தன்மையை காட்டுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.