ஆளுநர் முன்னெடுப்பது வரலாறா.? அரசியலா.? 

ty

ஆளுநர் மாளிகையிலிருந்து தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு பதில் வருகிறதோ இல்லையோ, தமிழ்நாடு அரசுக்கு எதிரான கருத்துக்கள் அவ்வப்போது ஆளுநர் மாளிகையிலிருந்து வருவதும் அதன்பிறகு சர்ச்சையாவதும் தொடர்கதையாகிவிட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகும், தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பிறகும் இவர்களுக்குள்ளான கருத்து மோதல்கள் ஏற்படத் தொடங்கின என்றே சொல்லலாம். காந்தி போன்றோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் சாதிசங்க தலைவராக மாற்றியிருப்பார்கள் என்றும், சுதந்திர தினத்தை கருப்பு நாளாக கடைபிடித்தவர்களையெல்லாம் பெரும் தலைவர்களாக கொண்டாடுகிறார்கள் என்றும் ஆளுநர் பேசியது சர்ச்சையான நிலையில், சுதந்திர போராட்ட வீரர்களை ஆளுநர் கையிலெடுத்து பேசியது அக்கறைக்கா இல்லை அரசியலுக்கா என்பதை சற்று விரிவாக பார்க்க வேண்டியிருக்கிறது.   

இங்கு தமிழ்நாடு ஆளுநருக்கென்று ஒரு முத்திரையை பதித்து வைத்திருக்கிறது திமுக. ஆம், இவர் ஆளுநர் ரவி அல்ல; ஆர்.எஸ்.எஸ். ரவி என்று விமர்சிக்க ஆளுநரே காரணாமாகி இருக்கக்கூடும் என்றே வெளிப்படையாக சொல்லலாம். ஆளுநருக்கென்று ஒருதனி அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருந்தபோதிலும், அவர் அரசியல் பேசக்கூடாது என்ற ஒரு சட்டத்தையும் அரசியலமைப்பு வழங்கியிருக்கிறது என்பதையும் ஆளுநர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. அப்படி இருக்கையில், ஆளுநர் மாளிகைக்கு கோப்புகள் வரும் முன்னே, உங்கள் கோட்பாட்டில் முரண் இருக்கிறது என்று வரிந்து கொண்டு வருவது அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்ல, ஆரோக்ய அரசியலையும் சீர்குலைக்கும் திட்டமாக எண்ணிவிடக்கூடும். 

நீட்டிற்கு எதிரான கோப்பு, எழுவர் விடுதலை கோப்பு, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அனுப்பப்பட்ட கோப்பு, பல்கலைக்கழக கோப்புகள் என ஆளுநர் மாளிகையில் நீண்ட நாட்களாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தது என்றால் அதில் மிகையிருக்காது. எந்த ஒரு கோப்பிற்கும் கையெழுத்திடாமல் கிடப்பில் போட்ட ஆளுநர் இன்றைக்கு வரலாற்றை பேசியது மட்டுமல்லாமல் விமர்சனத்தையும் சேர்த்து பேசிவிட்டுப்போனதன் விளைவு இன்று எழுந்த சர்ச்சைக்கும் ஆளுநர் மாளிகை முன்பு போடப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சுக்கும் முடிச்சுப்போட்டுக்கொண்டிருக்கிறது இங்குள்ள ஒருசில அரசியல் கட்சிகள். 

முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். ஆனால், அவரை ஜாதிக் கட்சி தலைவர் போல அடையாளப்படுத்துகிறார்கள் என்று ஆளுநர் பேசியதற்கு, இங்குள்ள சாதிச் சங்கங்கள் தான் அடையாளப்படுத்திக்கொண்டார்களே தவிர, இங்கு இருக்கக்கூடிய கட்சிகள் மீது பழிபோடுவது அபத்தம் என்று ஒருசில பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், சுதந்திர தினத்தை கருப்பு நாளாக கடைபிடித்தவர்களையெல்லாம் பெரும் தலைவர்களாக கொண்டாடுகிறார்கள் என்று மறைமுகமாக சாடிய ஆளுநருக்கு, அதே பெரியார் தான் விடுதலை அடைந்த தேசத்தை காந்தி தேசம் என்று பெயர் வைக்கச்சொன்னார் என்று திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்தார். 

அதுமட்டுமல்ல, மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழகத்தின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து மத்திய பாஜக அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். தினம் தினம் ஒரு நினைவு தினங்களும் பிறந்த தினங்களும் தியாகிகளுக்கு வந்து கொண்டிருந்த போதிலும், விடுதலைப் போராட்ட வீரர்களை  சாதிக்குள் அடைத்துவிட்டார்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலயும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் மருது சகோதரர்கள் நினைவு தினத்தில் பேசுவது இவ்வளவு நாட்கள் எங்கே போனார்கள், இப்போது இவர்கள் பேசுவதற்கு காரணம் தேர்தல் அரசியலுக்கான யுத்தியா என்றே பார்க்கப்படுகிறது.