ஒரு மரக்கட்டிலின் விலை இத்தனை லட்சமா? 

Cot

அமெரிக்க இ-காமர்ஸ் தளத்தில் இந்திய மரக்கட்டிலின் விலை தற்போது பெரும்பாலான இந்தியர்களை வாயடைக்க வைத்துள்ளது. 

கட்டில் என்பது நம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த ஒரு அங்கம். நாள் முழுவதும் வேலை பார்த்துவிட்டு இரவு நிம்மதியாக தூங்குவதற்கு விரும்பும் ஒவ்வொருவரும், அவர்களின் கட்டிலும் அதற்கு ஏற்றார்போல இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். தற்காலத்தில் பலவகையான கட்டில்கள் இருந்தாலும் கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்புவரை, கிராமங்களில் உள்ள அனைவரது வீட்டிலும் தவறாமல் இடம்பிடித்த ஒன்று மரக்கட்டில். குறிப்பாக கயிற்று கட்டில் என அழைக்கப்படும் இந்த கட்டிலானது துணி கயிறு, கொச்சை கயிறு அல்லது தென்னை நார் மூலம் பிண்ணப்படும். கோடை காலங்களில் வீட்டிற்கு வெளியே மரத்தடியில் கிடக்கும் இந்த கட்டில்கள் மழை காலத்தில் வீட்டிற்குள் இருக்கும். பெரும்பாலும், இந்த கட்டிலை பார்த்தது 90ஸ் கிட்ஸ்களாவே இருக்கும். இதை பயன்படுத்தியது அப்போதைய தாத்தா பாட்டிகள். ஆனாலும் இப்பொழுதும் பல வீடுகளில் பெரியவர்களின் நியாபகத்திற்காக அந்த வகை கட்டிகளை பாதுகாத்து வருகின்றனர். ஆனால் தற்போது இதன் விலையே இதுகுறித்து நம்மை பேச வைத்துள்ளது. 

ஒரு கட்டிலின் விலை ஒரு லட்சத்திற்கும் மேல்

அமெரிக்க இணையதள வணிகதளமான etsy.com-ல் இந்திய பாரம்பரிய கட்டில் என சணல் கயிறுகளால் பிண்ணப்பட்ட மரக்கட்டில் ஒன்று விற்கப்படுகிறது. இது கையால் செய்யப்பட்ட அரியவகை கட்டில் என்பது போல விளம்பரம் செய்யப்பட்டு விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிலின் விலை ரூ.1,12,039 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இந்த வகை கட்டில்கள் தயாரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனைப்பார்த்த இந்தியர்கள் வெறும் 4000 முதல் 5000 வரை மட்டுமே மதிப்புள்ள இந்த கட்டில்களை இப்படி கொள்ளை இலாபத்திற்கு விற்பதா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.