ஜி20 மாநாடு.. இனி ஜி21.! இந்தியா.. இனி பாரத்.!   

ji twenty

தலைநகரில் உலக தலைவர்கள்

ஜி20 மாநாடு டெல்லியில் அமோகமாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் நேற்றைய தினமே இந்தியாவிற்கு வருகை தந்திருந்தனர். உலகத் தலைவர்களுக்கு இந்தியா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 பாலி உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜி20 தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்பட்டது. 

அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், நைஜீரியாவின் அதிபர் போலா டினுபு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

சீனா, ரஷ்யா பங்கேற்கவில்லை

இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இந்த மாநாடு தலைநகர் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும்  நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த ஜி20 மாநாட்டில் சீனா, ரஷ்யா அதிபர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

’பாரத்’ பெயர்ப்பலகை

மாநாடு ஆரம்பித்தவுடன் ஒரு பூமி; ஒரு குடும்பம்; ஒரு எதிர்காலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அடுத்ததாக, மாநாட்டில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக, பிரதமர் மோடி அமர்ந்துள்ள பகுதிக்கு முன் ‘பாரத்’  என பெயர்ப்பலகை வைக்கப்பட்டது இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஏற்கனவே பாரத் பெயர் விவகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளான நிலையில், ஜி20 மாநாட்டில் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையின் பெயர்ப்பலகையிலும் பாரத் என்று குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்பட்டது. 

இந்திய பிரதமர் பேச்சு

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசத்தொடங்கினார். வளமான எதிர்காலத்திற்காக ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என பிரதமர் மோடி பேசினார். அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எங்களது நாட்டின் கொள்கை . அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நாம் உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேசினார். 

ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு

இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் ஒரு முக்கியமான நிகழ்வு என்று நடைபெற்றது. ஜி20 கூட்டமைப்பில் 21-வது நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டது. ஆப்பிரிக்க யூனியனை ஜி20 கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்வதற்கு இந்திய பிரதமர் மோடி முன்மொழிவை கொண்டு பேசினார். அதையடுத்து, ஆப்பிரிக்க யூனியன் ஜி20 மாநாட்டின் நிரந்தர உறுப்பினராக இணைந்தது. இதன் காரணமாக, இனி ஜி20 மாநாடு ஜி21 மாநாடு என்று அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.