இந்திய வம்சாவளி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த எலான் மஸ்க்

elon support vivek ramasamy

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபராக தற்போது பதவி வகித்து வரும் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவு பெற உள்ள நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் அதிபர் தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அந்நாட்டின் பிரதான எதிர்கட்சியான குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது. இதில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், ட்ரம்புக்கு போட்டியாக இந்தியாவின் வம்சாவளியானவரும் அமெரிக்க சட்ட நிபுணருமான விவேக் ராமசாமி என்பவரும் களத்தில் குதித்துள்ளார். 

சீனாவின் மிரட்டல் 

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபலமான நேர்காணல் நிகழ்ச்சியான டக்கர் கால்ஸன் நிகழ்ச்சியில் விவேக் ராமசாமி கலந்து கொண்டார். அப்போது, அமெரிக்காவின் மீகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்  சீனாவின் மிரட்டல்கள் குறித்தும் அதிபர் ஸி ஜின் பிங் குறித்தும் பேசினார். அத்துடன் இந்தியா, ஜப்பான்,  தென் கொரியா ஆகிய நாடுகளுடன் பொருளாதார நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும் பேசினார்.

மேலும்,  பல அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ள நிலையில், சீனாவின் பொருளாதார பிடிக்கும் சிக்கியிருக்கும் அமெரிக்காவை மீட்டெடுப்பதுதான் தனது தலையாய பணி என்றும், அதிபரானதும் அதுவே தனது முதல் முயற்சி என்றும் கூறினார். விவேக் ராமசாமியின் இந்த நேர்காணல் அமெரிக்கா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அவரது பிரச்சாரங்களுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

அமெரிக்காவின் குடியேற்றம்

37 வயதான விவேக் ராமசாமி, 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி பிறந்தார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் பெற்றோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த நிலையில், ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி நகரத்தில் விவேக் ராமசாமி வளர்ந்தார். ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற இவர் "woke, Inc : inside corporate america's social justice scam" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.  அதேபோல், "the CEO of Anti - woke Inc" நூலையும் பெயர்த்துள்ளார். 

எலான் மஸ்க் ஆதரவு

தற்போது அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட தீவிரம் காட்டிவரும் விவேக் ராமசாமி, முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்பை விட அதிக ஆதரவை பெற முனைப்பு காட்டி வருகிறார். இந்நிலையில், விவேக் ராமசாமிக்கு டெஸ்லா, மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் சி.இ.ஓ. வான பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்த அவர், விவேக் ராமசாமி நம்பிக்கைக்குரிய வேட்பாளர் என கூறியுள்ளார்.