வாகன உற்பத்தியில் மின்சாரமயமாகும் உ.பி.. இந்தியா முழுவதும் நடைமுறைபடுத்தப்படுமா.?

website post (23)

சுற்றுச்சூழல் மாசு மற்றும் எரிபொருள் இறக்குமதி கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்திய அரசு மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதே போல் மாநிலங்களும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்பவர்களுக்கும் வாங்குவோருக்கும் சலுகைகளை வழங்கி வருகின்றன. இதனால் இந்தியா முழுவதும் மின்சார வாகன உற்பத்தி மற்றும் விற்பனை கனிசமாக அதிகரித்து வருகிறது.

உத்திரப்பிரதேச மாநில அரசு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மக்களை கவரும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலும் கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்குவதற்கு அந்நிய செலவாணியின் பெரும் பகுதி செலவிடப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.

அது மட்டுமல்ல பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுகிறது. அதனால் மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்கும் நடவடிக்கையாக மின்சார வாகனங்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களிடையே மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் உத்தரப்பிரதேச அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அனைத்து ரக மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகளால் கார் உள்ளிட்ட மின்சார வாகனங்களின் மொத்த விலையிலிருந்து ரூ. 1 லட்சம் வரையிலும் இரு சக்கர வாகனங்களின் மொத்த விலையிலிருந்து ரூ. 20,000 வரையிலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்களும் மின்சார வாகனங்களை வாங்க அரசு ஊக்குவிக்கிறது. இதற்காக, அரசு ஊழியர்கள் முன்பணம் வழங்கவும் அம்மாநில அரசு அனுமதித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநில அரசின் இந்த முடிவால் அம்மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தியாவிற்கு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்தார். அடுத்ததாக, இந்திய தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திராவை சந்தித்தார். அப்போது மகேந்திரா நிறுவனத்தின் மின்சார ஆட்டோ ஒன்றினை மும்பை சாலையில் ஓட்டி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்தநிலையில் மின்சார வாகனத்திற்கு அவர் விளம்பரம் கொடுத்திருக்கிறாரா என்ற ஒரு பார்வை இருந்தாலும், உத்தரப்பிரதேச மாநிலங்களின் முன்னெடுப்புகளால், இனி வரும் காலங்களில் மின்சார வாகனங்களின் தேவை இந்தியாவில் அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது. 

மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகித வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிற தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்திலும் மின்சார வாகனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பது எதிர்கால தேவை மின்சார வாகனங்களாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து இந்தியாவில் செயல்படுத்தி வருவதால், இந்த நடைமுறை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழும் பட்சத்தில், அதற்கான விடை விரைவில் பூர்த்தியாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.