பிரபலங்களை அச்சுறுத்தும் DeepFake.! 

deepfake

உலக நாடுகள் வளர்ச்சி என்கிற நோக்கில் கடிவாளம் கட்டப்பட்ட குதிரையைப் போல நேர் சிந்தனையுடன் துள்ளி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு பின்னால் வரும் ஆபத்துக்களையும் விளைவுகளையும் ஆபத்து வந்த பிறகே திரும்பி பார்க்கின்றன. உலக மக்களிடம் உலக நாடுகளின் தொழில்நுட்பங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு வரவேற்பை பெற்றாலும் அதற்கேற்றார்போல விமர்சனங்களையும் பெற்று வருகிறது என்றால் அதில் மிகையிருக்காது. அப்படி, AI என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் மதிமயங்கி ஆச்சர்யப்படும் அளவிற்கு உருவாக்கப்பட்டாலும், தற்போது AI மூலம் உருவாக்கப்பட்ட DeepFake மக்களை மதி இழக்கச் செய்யும் அளவிற்கு ஒரு தொழில்நுட்பம் இருக்குமென்றால், அது தேவையே இல்லை என்று தற்போது உணரும் அளவிற்கு சென்றிருக்கிறதென்றால் அதை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பதா இல்லை தனிமனித சூழ்ச்சி என்பதா என்று புரியவில்லை. தொழில்நுட்பத்தின் அவசியத்தை அறிந்த உலக நாடுகள் தனிமனித அவசியத்தையும் ஒழுக்கத்தையும் அறிந்து தொழில்நுட்பத்திற்கும் கட்டுப்பாடுகளை விதிக்குமா என்ற கேள்வியோடு நகர்கிறது இந்த செய்தி தொகுப்பு.

AI மக்கள் மத்தியில் அறிமுகமானபோது செயற்கை நுண்ணறிவு செய்த செயல்களை கண்டு ஆச்சர்யப்பட்டு போயிருப்போம். தொடர்ச்சியாக, பிரபலங்களின் முகத்தை புதுதோற்றத்தில் காண்பித்தது, இறந்த தலைவர்களோடு பேசுவது, செய்தி வாசிப்பது போன்ற செயல்களைக் கண்டு உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு தான் போயிருப்போம். அதே செயற்கை நுண்ணறிவு DeepFake-களையும் உருவாக்கும், அது மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தும் என்று தற்போது பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு நிகழ்ந்த சம்பவத்தின் மூலம் அறிய முடிகிறது. இதற்கு முன்னால் செயற்கை நுண்ணறிவு AI செய்த செயல்களைப் பற்றி அதிகம் வியந்து பார்த்திருக்குறோமேதவிர, விரக்தியடையவில்லை. 

குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசாத ஒன்றை பேசியதுபோல சித்தரித்துக் காட்டியதை வியந்து பார்த்தோம். அதையடுத்து, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருந்த காவாலா பாட்டில் நடனமாடிய தமன்னாவிற்கு பதில், நடிகை சிம்ரன் ஆடியது போன்ற வீடியோ வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தொழில்நுட்பத்தின் புதிய மைல்கல்லாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஊடகத்தில் செய்தி வாசிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது. இப்படி, AI-ன் தொழில்நுட்பத்தைக் கண்டு உலக மக்கள் அதிக அளவில் வியந்து பார்க்கும் அளவிற்கு செயல்களை செய்தது. 

இந்தநிலையில், எந்த ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டோமோ, இன்று அதே தொழில்நுட்பத்தை பார்த்து அதிர்ச்சியடையும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறது இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். அண்மையில், ஷாராபடேல் என்பவர் வீடியோவில் தோன்றி சமூக வலைதளத்தில் வெளியிட்ட உண்மையான வீடியோவை, பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை ஷாராபடேல் வெளியிட்ட வீடியோவில் பொருத்தி உருவான DeepFake பொய்யான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இன்னும் சிலர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சமூகத்தை முச்சந்திக்கு இட்டுச்செல்லும் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்களை பதிவு செய்து வந்தனர். ராஷ்மிகா மந்தனாவைத்தொடர்ந்து, பிரபல நடிகை கத்ரீனா கைஃப்-ன் படமும் AI தொழில்நுட்பத்தால் தவறாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.      

இதுமட்டுமல்லாமல், உலக நாடுகளில் உள்ள தலைவர்களின் குரல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக கடந்த காலத்திலும் அண்மையிலும் வெளியான செய்திகளையும் பார்த்திருப்போம். இப்படி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தனிநபர் பழிவாங்கல் என தொடர்ந்து அரங்கேறும் DeepFake-களுக்கு மத்தியில், உலக நாடுகள்   தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறதேதவிர, தொழில்நுட்பம் என்கிற பெயரில் ஒட்டுக்கேட்பு, தவறான சித்தரிப்பு போன்ற செயல்களையும் கட்டுப்படுத்துவதற்க்கான மூலக்கூறுகளையும் ஆராய வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆரம்பத்தில் சொன்னதுபோல, வளர்ச்சி என்கிற பெயரில் துள்ளி குதித்துக்கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு மத்தியில், பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் DeepFake வீடியோவால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை வலுவாக்க வேண்டும் என்ற குரல் எழுந்திருக்கிறதென்றால் இது ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கை மணி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.