ஆபாச விளம்பரம் மூலம் இளைஞர்களிடம் மோசடி - குற்றவாளிகளை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ்

cybercrime

இளைஞர்களை குறிவைக்கும் ஆபாச விளம்பரங்கள்

பாலியல் ரீதியிலான விளம்பரம் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட 7 பேரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாலியல் விளம்பரங்கள் மூலம் ஏராளமான இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த தியாகு என்பவர் இந்த போலியான பாலியல் விளம்பரத்தை பார்த்து ரூ.7.84 லட்சத்தை இழந்துள்ளார். இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

7 பேரில் 5 பேர் பொள்ளாச்சி

இந்நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரம் உதவி ஆணையாளர் சரவணன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிபடை மூலம் சைபர் கிரம் குற்றவாளிகளின் செல்போல் எண்கள் ஐ.பி.முகவரி மற்றும் வங்கி விவரங்கள் அடிப்படையில், குற்றவாளிகள் மும்பையில் பதுங்கி இருந்ததை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து மும்பைக்கு விரைந்த காவல்துறையினர், கர்ணன், தமிழரசன், மணிகண்டன், ஜெயசூர்யா பாண்டியன், விக்னேஷ் வீரமணி, அப்சல் ரகுமான், பிரேம் குமார்,ஆகிய ஏழு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 பேரில் 5 பேர் பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள். 

குற்றவாளிகளின் போலி வங்கி கணக்குகள் 

கைது செய்தவர்களிடமிருந்து 36 சிம்கார்டு, 34 செல்போன், 15 வங்கி அட்டை மற்றும் ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கிக் கணக்கில் இருந்த 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி போலி வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர். குற்றவாளிகள் கையில் இருந்த கார்டுகளின் அடிப்படையில் வங்கி நடவடிக்கைகளை கண்டறிந்து வருவதாகவும்  அதன் அடிப்படையில் மேலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பின்னர் தெரிய வரும் எனவும் சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர் விசாரணை

இந்த நிலையில் கைது செய்த ஏழு பேரையும் மும்பையில் இருந்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு தனிப்படை போலிசார் அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.