தோழர் என். சங்கரய்யா காலமானார்.!

N Sankaraiah

சுதந்திர போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

அகில இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளரும், விடுதலை போராட்ட வீரருமான என். சங்கரய்யா (வயது-102) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், சகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் உயிரிழந்தார். இது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இரண்டு தினங்களுக்கு முன்பு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பொல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு தினங்களாக சிகிச்சை பெற்று வந்த என். சங்கரய்யா சிகிச்சை பலனளிக்காமல் இன்று (நவம்பர் 15) காலை 9.30 மணியளவில் உயிரிழந்தார். சங்கரய்யாவின் இறப்பை மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உறுதிபடுத்தியுள்ளார்.  தற்போது மருத்துவமனையில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நண்பகல் வரை அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது. அடுத்ததாக நண்பகல் 2 மணிக்கு மேல் டி. நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும்  பொதுமக்கலின் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது.

என்.சங்கரய்யா அவர்களுக்கு கடந்த ஆண்டு தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கெளரவித்தது. நூற்றாண்டைக் கடந்தும் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவின் இறப்பு பெரும் இழப்பு. சங்கரய்யாவின் இறப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.