மனிதம் மரத்துப் போய்விட்டதா? காஸாவில் உள்ள மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

hamas

பாலஸ்தீனத்தின் காஸா மருத்துவமனையில் நடந்த குண்டு வெடிப்பில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொள்ளப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதயமுள்ளோரை கலங்க வைத்துள்ளது

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள X தள பதிவில்,  "போர் என்பதே கொடூரமானது.. அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக காஸா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் - உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன. 

மனிதம் மரத்துப் போய்விட்டதா?

போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

11 நாட்களாக தொடரும் போர்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் இராணுவத்தினருக்குமிடையே கடந்த அக்-07ம் தேதி ஆரம்பித்த போர் 11 நாட்களை கடந்தும் போரின் தீவிரம் குறையாமல் இருந்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் குண்டுகளை எறிவதும், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக பலர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பதும் உயிரிழப்பதும் மருத்துவமனைகளில் அழுகுரல் கேட்பதும் சமூக வலைதளங்களில் வெளியாகி உலக மக்களின் இதயங்களை கசக்கி பிழிந்திருக்கிறது இந்த இரு நாடுகளுக்கிடையிலான போரில். 

இஸ்ரேல் மறுப்பு 

இப்படிப்பட்ட சூழலுக்கு மத்தியில், காசாவில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு மத்தியில், இந்த குண்டை நாங்கள் போடவில்லை என்று இஸ்ரேல் மறுத்து வருகிறது. இந்த சம்பத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.