தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது.. கர்நாடக அரசு திட்டவட்டம்.!

Cau Siddha

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் கர்நாடக அரசு தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

காவிரி ஒழுங்காற்று கூட்டம்

காவிரி ஒழுங்காற்று கூட்டம் இன்று செப்-12 டெல்லியில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசும் கர்நாடகா அரசும் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொள்ள இருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி செப்டம்பர் 12-ந்தேதி (இன்று) வரை 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு முன்வைக்க இருக்கிறது. 

 தண்ணீர் திறந்து விட முடியாது

அதேநேரத்தில், கர்நாடகா அரசும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என காவிரி ஒழுங்காற்று வாரியத்தில் தெரிவிக்க இருக்கிறது. தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் செத்து மடிவதை செய்திகளில் அதிகமாக பார்க்க முடிந்தது. அதைத்தொடர்ந்து, காவிரியில் இருந்து தண்ணீரை பெற்றுத் தருவதற்கு தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. 

காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை கொடுக்கிறது

இந்தநிலையில், இன்று நடைபெறக்கூடிய காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடகா அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தமிழ்நாடு அரசுக்கு எதிராக சர்ச்சை கருத்தை தெரிவித்திருக்கிறார். 

"ஆகஸ்ட் இறுதி வரை 86 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும், ஆனால் நாங்கள் பாதி அளவு கூட தரவில்லை. தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தை அணுகினாலும், அவர்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை கொடுக்கிறது. மேகதாது திட்டத்தை எதிர்க்க தமிழகத்திற்கு எந்த காரணமும் இல்லை. எங்கள் பகுதியில் நாங்கள் அணை கட்டுகிறோம், ஆனால் மத்திய அரசும் தாமதம் செய்கிறது" என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.