ஆகஸ்ட் 20.. டிக் அடித்த அரசியல் தலைவர்கள்.. சுவாரஸ்யமான பின்னணி.!   

august

தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகிறது. தினந்தோறும் அரங்கேறும் போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், அரசியல் நிகழ்வுகள் என நாளுக்கு நாள் நிகழும் நிகழ்வுகள் அதிகம். இப்படி தினந்தோறும் அரங்கேறும் நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. ஆனால், வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி அரங்கேறப்போகும் அரசியல் நிகழ்வுகளால் தமிழ்நாட்டின் வருங்கால அரசியலே தலைகீழாக மாறும் என்று கூட சொல்லலாம், அதில் மிகையும் கூட இருக்காது. 

மதுரையில் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்க்கான வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவே இருக்கக்கூடும். அதிமுக-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் சந்திக்கும் முதல் மாநாடு இது. 

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியுற்ற பிறகு, கட்சிக்குள் நடந்த பல்வேறு குழப்பங்களால் தமிழ்நாட்டில் சரியான எதிர்க்கட்சியாக எடப்பாடி தலைமையிலான அதிமுக செயல்படவில்லை என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதற்கிடையில் அதிமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சியான பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது. இதனால், தமிழ்நாட்டின் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள் தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வந்தது அதிமுக மத்தியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. 

இப்படி, பல்வேறு இடையூறுகளையும் கருத்து மோதல்களையும் சந்தித்து வந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக, தற்போது இடையூறுகளை களைந்து கருத்து மோதல்களை களைந்து புதிய எழுச்சியை பெறப்போகிறது ஆகஸ்ட் 20-ம் தேதி. மதுரையில் நடைபெற இருக்கும் மாநாட்டிற்காக தற்போது நடைபெற்று வரும் செயல்படுகளை பார்க்கும்போதே அனைவருக்கும் கண்ணைக் கட்டுகிறது. பிரம்மாண்ட மேடை, நீண்ட தூரம் பந்தல், மூன்று வேலை உணவு மற்றும் அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை நினைவுப்படுத்தும் வகையில் அதன் மாதிரிகள் என மதுரையை இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு ஆகஸ்ட் 20-ம் தேதி அமர்க்களப்படுத்த இருக்கிறது அதிமுக. 

இது ஒருபுறம் இருக்க, அதே ஆகஸ்ட் 20-ம் தேதி தமிழ்நாட்டை திக்குமுக்காடச் செய்ய இருக்கிறது திமுக. தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை பெற்று வரும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது திமுக. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கம் எதிர்க்கட்சியாக இருந்தபோதே திமுக முன்வைத்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அதற்க்கான போராட்டங்களை முன்னெடுக்காமல் அதிமுக மாநாடு நடத்தும் அதே நாளில் திமுக அரசு திட்டமிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறது என்று அதிமுக அமைச்சர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இது அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அதே ஆகஸ்ட் 20-ம் தேதியில் சென்னையில் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார் ஓபிஎஸ். அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியநிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசிக்க இருக்கிறார். இதுவும் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. 

இதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் அரங்கேறிய நாங்குநேரி சம்பவம் தற்போது வரைக்கும் பேசுபொருளாகி இருக்கிறது. தற்போதைய தமிழ்நாடு அரசியல் களத்தின் பரபரப்புக்கும் பேசுபொருளுக்கும் முக்கிய காரணமாக இருந்து வருவது இந்த நாங்குநேரி சம்பவம் தான். இந்த சம்பவத்தை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தில் விசிக தலைமையில் ஆகஸ்ட் இதே ஆகஸ்ட் 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. பின்னர், அந்த ஆர்ப்பாட்டம் ஆக-21-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 

இப்படி தமிழ்நாடு அரசியல் களம் ஆகஸ்ட் 20 முக்கியத்துவம் வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் மாநாடு, ஒரு பக்கம் உண்ணாவிரதப் போராட்டம், ஒரு பக்கம் ஆலோசனைக் கூட்டம் என தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள், அக்கட்சியின் தலைவர்கள் என ஆகஸ்ட் 20-ம் தேதியை தேர்ந்தெடுத்திருப்பது உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்தவையாகத்தான் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் வருங்கால அரசியல் மாற்றம், தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பான நீட் விலக்கிலிருந்து விடுதலை என இவற்றிற்க்கெல்லாம் வித்திடப்போவது தான் இந்த ஆகஸ்ட் 20. இந்த நாள் தமிழ்நாட்டில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...