5ஜி சேவைக்கு சிம்கார்டை மாற்ற வேண்டுமா? – ஏர்டெல் பயனாளர்களுக்கு அறிவுறுத்தல்!

Airtel-5g

இந்தியாவில் அடுத்த தலைமுறை இணையசேவையான 5ஜி சேவையை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், 5ஜி சேவையை பெற சிம்கார்டு மாற்ற வேண்டுமா என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளது.

இந்தியாவில் அடுத்தலைமுறை இணையசேவையான 5ஜி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களின் 5ஜி சேவையை போட்டிப் போட்டு தொடங்க இருக்கின்றன.

அண்மையில் கூட, ”தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் விரைவில் ஏர்டெல் 5ஜி பயன்பாட்டுக்கு கொண்டுவர முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று ஏர்டெல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் உள்ள நகர்ப்புற பகுதிகளில் அதன் 5G நெட்வொர்க்குடன் இணைக்கவும் ஏர்டெல் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக மக்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்ததையடுத்து தற்போது அதற்கான விளக்கங்களை ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது.

அதில் குறிப்பாக, 5ஜி சேவையை பெற மொபைல் மற்றும் சிம்கார்டுகளை மாற்ற வேண்டுமா? என்பது பலரின் முக்கியமான கேள்வியாக இருந்து வருகின்றது. அதற்கு பதிலளித்த ஏர்டெல், அனைவரும் மொபைல் மாற்றத் தேவையில்லை, 5ஜி சேவை இல்லாத மொபலை கொண்டவர்கள் மட்டும் மாற்றினால் போதும் எனக் கூறியுள்ளது. 

மேலும், “உங்கள் நகரத்தில் எப்போது 5ஜி சேவை தொடங்கப்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 5ஜி சேவை இருக்கும் நகரங்களில் 5ஜி மொபைலை வாங்க வேண்டும். ஆனால், புதிய சிம்கார்டு வாங்கத் தேவையில்லை. ஏனென்றால், தற்போதுள்ள 4ஜி சிம்மை நீங்கள் அப்கிரேடு செய்தால் மட்டும் போதுமானது. இது இணைய சேவை 4ஜியை விட பன்மடங்கு அதிகம் இருக்கும்.  அனுப்புதல் மற்றும் டவுன்லோடு, கேமிங் விளையாடுதல் ஆகியவை எல்லாம் புதிய அனுபவத்தை கொடுக்கும்.” என ஏர்டெல் கூறியுள்ளது.