பெங்களூருவில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற நபர் அடித்துக் கொலை.!

website post (93)

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள ராமநகரா மாவட்டத்தில் பசு காவலர்கள் என்று கூறி முஸ்லிம் நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, இத்ரிஸ் பாஷா என்ற மாட்டு வியாபாரி மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள், புனித் கெரேஹள்ளி என்ற பசு பாதுகாவலாளர் மற்றும் அவரது பாதுகாவலாளர்களால் தாக்கப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்

இத்ரிஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் கால்நடைகளை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் வாகனத்தை பசு காவலர்கள் தடுத்து நிறுத்தினர். சந்தையில் இருந்து மாடுகளை வாங்கியதாக வியாபாரிகள் கூறியும், பசு காவலர்கள் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். இத்ரிஸ் பணம் கொடுக்க மறுத்ததால், பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கூறி அவரையும், அவரது கூட்டாளிகள் இருவரையும் தாக்கினர்.

தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் இத்ரிஸ் மற்றும் இர்ஃபானைத் துரத்திச் சென்றபோது, ​​மற்றவர்கள் கண்டெய்னர் டிரைவர் சையத் ஜாகீரைத் தாக்கினர். ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தலையிட்டு, ஜாஹீரையும் கெரேஹள்ளியையும் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். 

வழக்கு

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்றதாக ஜாஹீர் மற்றும் பலர் மீது கெரேஹள்ளி புகார் அளித்தார். ஜாஹீர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கர்நாடகா பசுவதை மற்றும் கால்நடை தடுப்புச் சட்டம், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், விலங்குகள் போக்குவரத்துச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், கெரேஹள்ளி மற்றும் பிற பசு காவலர்களால் தாக்கப்பட்டதால் இத்ரிஸ் இறந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

ஜாகீர் அளித்த புகாரின் பேரில், கெரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்கொலையில் சம்பத்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இத்ரீஸின் உறவினர்கள் மற்றும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கைது

சாத்தனூர் அருகே கால்நடைகளை பாதுகாப்பதாக கூறி புனித் கெரேஹள்ளி என்பவரால் இத்ரிஸ் பாஷா தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து இத்ரீஸின் குடும்பத்தினர் சாத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் புனித் கெரேஹள்ளியை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது புனித் கெரேஹள்ளியிடம் சாத்தனூர் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சாத்தனூர் காவல் நிலையம் அருகே உயிரிழந்த இத்ரீஸ் பாஷாவின் உறவினர்கள் கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.