மஹிந்திரா எலெக்ட்ரிக் காரின் 5 முக்கிய அம்சங்கள்

5 important facilities of Mahindra Electronic Car

மஹிந்திரா அண்மையில் வெளியீடு செய்த எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பற்றிய டாப் 5 முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உலக மின் வாகன தினத்தை முன்னிட்டு வாகன உற்பத்தியாளர்கள் சிலர் தங்களின் எதிர்கால மின்வாகன தயாரிப்புகளை வெளியீடு செய்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (Mahindra and Mahindra), அதன் எக்ஸ்யூவி 400 (XUV400) எலெக்ட்ரிக் காரை அண்மையில் வெளியீடு செய்தது.

இது ஓர் எஸ்யூவி ரக மின்சார காராகும். டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இப்புதுமுக எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது மஹிந்திரா நிறுவனம்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முதல் அதிக வேக காராக எக்ஸ்யூவி400 காரை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இந்த வாகனம் வெறும் 8.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் வேறு எந்தவொரு எலெக்ட்ரிக் காரும் இத்தகைய குறுகிய இடைவெளியில் மணிக்கு 100கிமீ எனும் வேகத்தை எட்டாது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிமீட்டராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதன் போட்டியாளனான நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் சற்று அதிக வேகம் ஆகும்.

மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரை அதிக வேகத்தில் செல்லும் காராக மட்டுமே தயாரிக்கவில்லை. ஒற்றை சார்ஜில் மிக அதிக ரேஞ்ஜை தரும் காராகவும் தயாரித்திருக்கின்றது. தற்போது நிறுவனம் தெரிவித்திருப்பதன்படி, 456 கிமீ ரேஞ்ஜை தரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 39.4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி பேக் ரியல் லைஃபில் 380க்கும் அதிகமான கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இந்த எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாளரான நெக்ஸான் இவி-யில் 40.5 kWh பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 430க்கும் அதிகமான கிமீ தூரம் பயணிக்க முடியும். நெக்ஸான் இவி மேக்ஸ் மாடலிலேயே இந்த சூப்பரான பவர்கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரில் மணிக்கு 150 கிமீ செல்லுவதற்கு ஏதுவாக சிங்கிள் மின் மோட்டார் முன் பக்க வீலை இயங்கச் செய்யும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 149 பிஎஸ் பவரையும், 310 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.