Tamil News
Tamil News
Thursday, 16 Nov 2023 11:30 am
Tamil News

Tamil News

2024 இளங்கலை நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

மே 5-ல் நீட் தேர்வு

தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) உள்ளீடுகளைக் கருத்தில் கொண்டும், பல்வேறு வாரியங்களின் ஆலோசனைகளுக்குப் பிறகும், அவர்களின் இரண்டாம் நிலைப் பாடத்திட்டத்தை கோவிட் காலத்தில் பகுப்பாய்வு செய்து பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை ஆணையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், 2024-ம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 5-ம் தேதி நடத்தப்படும் என்றும், இளங்கலை மருத்துவம், பல் மற்றும் அதன் தொடர்புடைய படிப்புகளுக்கான சேர்க்கை பதிவு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தொடங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த சேர்க்கை பதிவுக்கான சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பாடத்திட்டம் அடுத்த வாரம்

ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வை 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகிறார்கள். இளங்கலை நீட் தேர்வு பதிவு செய்வதற்க்கான நடைமுறை ஜனவரி மாதம் 24-ம் தேதி தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு  இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கியிருக்கிறது. 2024 நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்

அடுத்த வாரம் இளங்கலை நீட் தேர்வின் பாடத்திட்டம் வெளியிடப்படுவதால், நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு இன்னும் ஆறு மாத காலம் இருப்பதால் மாணவர்கள் இந்த ஆறு மாத காலத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குநர் சுபோத் குமார் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களை கொண்டது. அதில், உயிரியல் பாடத்திலிருந்து 360 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்திலிருந்து 180 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்திலிருந்து 180 மதிப்பெண்களும் உள்ளடக்கியது. இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்கான சேர்க்கை தொடர்பாக, neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.