Tamil News
Tamil News
Wednesday, 15 Nov 2023 11:30 am
Tamil News

Tamil News

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் என்ன குண்டர்களா? இதுதான் நீங்கள் பேசும் சமூக நீதியா? என அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சொல்லுங்க மிஸ்டர் ஸ்டாலின்.? 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்; “திருவண்ணாமலையில் தன்னுடைய நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த கூடாது என்று அமைதியான வழியில் போராடிய பச்சயப்பன் என்ற விவசாயியை பாலியல் குற்றவாளி, கள்ளச்சாராய குற்றவாளி, விபச்சார தொழில் குற்றவாளி போன்றவர்களை கைது செய்யும் குண்டர் சட்டத்தில் திமுக அரசு கைது செய்துள்ளது. திருவண்ணாமலையில் போராட்டம் செய்தவரை அவரது குடும்பம் எளிதாக சந்திக்க கூடாது என்பதற்காக மதுரை சிறையில் கொண்டு போய் அடைத்துள்ளார்கள்.  விவசாயிகள் மீது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஏன் இந்த வன்மம்? தமிழ்நாட்டின் சர்வாதிகாரி என்ற நினைப்பு உங்கள் தலைக்கு ஏறி விட்டதா? அரசாங்கத்தை எதிர்த்து அமைதியாக போராட்டம் செய்யும் விவசாயிகள் குண்டர்களா? இது தான் உங்கள் கட்சி வாய் கிழிய பேசும் சமூக நீதியா? பதில் சொல்லுங்க மிஸ்டர் ஸ்டாலின்” என்று தெரிவித்துள்ளார். 

பாஜக கண்டனம்

இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதற்கு கண்டனம் தெரிவித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர்.

திமுக அரசின் இந்த கோழைத்தனமான செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த பாசிச திமுக அரசிடம் இருந்து, போராடும் விவசாயிகளை பாதுகாக்க அவர்கள் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் சட்ட உதவியையும் தமிழ்நாடு பாஜக வழங்கும் என்ற உறுதியை அளிக்கிறோம்.

டிடிவி கண்டனம்

அதனைத்தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.   

செய்யாறு நகரில் ஏற்கனவே சிப்காட் தொழிற்பூங்காவின் இரண்டு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில் மூன்றாவது அலகை அமைப்பதற்காக மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள  3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. நெல், கரும்பு, கேழ்வரகு, மற்றும் காய்கறிகள் என பலவகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், எவ்வித கருத்தையும் கேட்காமல் நிலம் கையகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து அம்மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தங்களின் நிலவுரிமையை மீட்க கடந்த 125 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடிவரும் விவசாயிகளை சமூகவிரோதிகள் போல சித்தரித்து அவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருப்பதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது. எனவே, நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு,  சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க முடிவை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.