Tamil News
Tamil News
Monday, 11 Sep 2023 12:30 pm
Tamil News

Tamil News

அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து 5000 கனஅடி நீரை கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  

காவிரி ஒழுங்காற்று கூட்டம் -  தமிழ்நாடு அரசு அதிருப்தி

காவிரி ஒழுங்காற்று கூட்டம் இன்று செப்-12 டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசும் கர்நாடகா அரசும் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி செப்டம்பர் 12-ந்தேதி (இன்று) வரை 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டையும் இன்னும் சில கர்நாடக அரசுக்கு எதிரான அதிருப்தியை தமிழ்நாடு அரசு முன்வைத்தது. 

செத்து மடிந்த சம்பா 

அதேநேரத்தில், கர்நாடகா அரசும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என காவிரி ஒழுங்காற்று வாரியத்தில் தெரிவித்தது. தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் செத்து மடிவதை செய்திகளில் அதிகமாக பார்க்க முடிந்தது. அதைத்தொடர்ந்து, காவிரியில் இருந்து தண்ணீரை பெற்றுத் தருவதற்கு தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. 

சித்தராமையா சர்ச்சை கருத்து 

இன்று நடைபெறக்கூடிய காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடகா அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தமிழ்நாடு அரசுக்கு எதிராக சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். 

தமிழகம் தொல்லை கொடுக்கிறது

"ஆகஸ்ட் இறுதி வரை 86 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும், ஆனால் நாங்கள் பாதி அளவு கூட தரவில்லை. தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தை அணுகினாலும், அவர்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை கொடுக்கிறது. மேகதாது திட்டத்தை எதிர்க்க தமிழகத்திற்கு எந்த காரணமும் இல்லை. எங்கள் பகுதியில் நாங்கள் அணை கட்டுகிறோம், ஆனால் மத்திய அரசும் தாமதம் செய்கிறது" என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

திறந்துவிட பரிந்துரை

இந்தநிலையில், அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து 5000 கனஅடி நீரை கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இன்று நடக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இதுதொடர்பாக இறுதி முடிவு மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.