Tamil News
Tamil News
Monday, 04 Sep 2023 12:30 pm
Tamil News

Tamil News

விருதுநகர் மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில்  முறைகேடு நடந்திருப்பதாகவும், அது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

கேள்விக்குள்ளாக்கப்படும் வெளிப்படைத்தன்மை

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "திருமங்கலத்தில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில்  முறைகேடுகள் நடந்திருப்பதும், கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் புள்ளி விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதும் எனது கவனத்திற்கு வந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை 41 லட்சம் வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாகவும், அதில் 11 லட்சம் வாகனங்கள் விஐபிகளுக்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுங்கவரி வசூல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. 

பிரதமர் தலையிட வேண்டும்

இந்த சுங்கச்சாவடியின் செயல்பாட்டிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்தாலும், நிலைமை மாறாமல் உள்ளது. மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளும் நீடிக்கின்றன. இந்த கடுமையான குற்றச்சாட்டு மற்றும் பொது நிதி இழப்பு ஏற்படக்கூடிய காரணங்களால், இந்தச் சிக்கலை தீர்க்க பிரதமர் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை

மதுரை திருமங்கலத்தில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் நடந்த முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் வகையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், தவறுக்கு பொறுப்பான அனைத்து தனிநபர்களையும் நிறுவனங்களையும் பொறுப்பாக்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், கப்பலூர் சுங்கச்சாவடி விசாரணை முடிந்து, அதன் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க  அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மக்களுக்கு நிவாரணம் 

கப்பலூர் சுங்கச்சாவடியின் நீண்டகாலப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் கப்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான நிவாரணம் கிடைக்கும்" என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.